ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்: கோவில்களில் பக்தர்கள் தரிசனம்

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் மலைக்கோவிலில் நேற்று முன்தினம் திருப்படி விழா நடந்தது. நேற்று அதிகாலை, புத்தாண்டில், முருகனை வழிபட, 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணியர் குவிந்ததால், பொது வழியில் 5 மணி நேரம் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவள்ளூர் எஸ்.பி., ஸ்ரீனிவாச பெருமாள் மேற்பார்வையில், 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் வீரரராகவ பெருமாள் கோவிலில், தனுர் மாத பூஜை, புத்தாண்டு பிறப்பு ஆகியவற்றை முன்னிட்டு, நேற்று, காலை 5:00 மணிக்கு மேல், பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

தீர்த்தீஸ்வரர் கோவிலில், மூலவர் தீர்த்தீஸ்வரர், திரிபுரசுந்தரி தாயார், முருகன் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சத்தியமூர்த்தி தெரு, பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், பூங்கா நகர் சிவ - விஷ்ணு கோவில், உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.

தேவி மீனாட்சி நகர், விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், என்.ஜி.ஓ., காலனி சந்தான விநாயகர் கோவில், காக்களூர் வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சுவாமி தரிசனம் செய்தனர்.

பேரம்பாக்கம் அங்காள பரமேஸ்வரி கோவிலில், 10 கிலோ சந்தன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார்..

பொன்னேரி


பொன்னேரி அகத்தீஸ்வரர், தேவதானம் ரங்கநாத பெருமாள், திருவாயற்பாடி கரிகிருஷ்ண பெருமாள், வேண்பாக்கம் வரசித்தி விநாயகர், திருவேங்கடாபுரம் பொன்னியம்மன், தடப்பெரும்பாக்கம் லட்சுமியம்மன், திருப்பாலைவனம் பாலீஸ்வரர், ஆண்டார்குப்பம் ஸ்ரீபாலசுப்ரமணியசுவாமி, பெரும்பேடு முத்துகுமாரசாமி, மேலுார் திருவுடையம்மன், மீஞ்சூர் ஏகாம்பரநாதர், வரதராஜ பெருமாள், சிவபுரம் சாய்நாத மந்திர் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு அபிஷேக தீபாராதனை நடந்தது.

ஊத்துக்கோட்டை

ஊத்துக்கோட்டை திருநீலகண்டேஸ்வரர் கோவில், சுருட்டப்பள்ளி திருநீலகண்டேஸ்வரர் கோவில், பெரியபாளையம் பவானியம்மன் கோவில் ஆகியவற்றில் காலை முதல் பக்தர்கள் குடும்பத்துடன் சென்று வழிபட்டனர். தாராட்சி பரதீஸ்வரர் கோவில், வடதில்லை பாபஹரேஸ்வரர் கோவில், தேவந்தவாக்கம் தேவநாதீஸ்வரர் கோவில், பெரியவண்ணாங் குப்பம் ஆத்மநாதர் கோவில், காரணி காரணீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் அதிகளவில் தரிசனம் செய்தனர்.

கும்மிடிப்பூண்டி


சிறுவாபுரி முருகனை தரிசிக்க அதிகாலை முதல், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இரண்டு மணி நேரம் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து முருகனை தரிசித்தனர்.

கும்மிடிப்பூண்டி ஞானவேல் முருகன், பிரசன்ன வெங்கடேச பெருமாள், எம்.எஸ்.ஆர்., கார்டன் குரு தட்சிணாமூர்த்தி, லட்சுமி கணபதி, எஸ்.பி., முனுசாமி நகர் சித்தி விநாயகர், புதுகும்மிடிப்பூண்டி எல்லையம்மன், கிருஷ்ணர் கோவில், குமாரநாயக்கன்பேட்டை வெக்காளியம்மன், கவரைப்பேட்டை அரியதுறை வரமூர்த்தீஸ்வரர், பஞ்செட்டி அகத்தீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில், நேற்று சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன.

ஆர்.கே.பேட்டை:


வேலுார் மாவட்டம், பொன்னை அடுத்துள்ள வள்ளிமலை மலை கோவிலில், மூலவர் வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமிக்கு சிற்பபு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. குகை கோவிலில் உள்ள வள்ளி புடைப்பு சிற்பத்திற்கு குறத்தி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.


- நமது நிருபர் குழு -

Advertisement