கீழ்பவானி இரண்டாம் போகத்துக்கு 10 முதல் தண்ணீர் திறக்க பரிந்துரை


ஈரோடு, ஜன. 2-
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி, இரண்டாம் போக பாசனத்துக்கு வரும், 10ல் தண்ணீர் திறக்க, ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, நீர் வளத்துறைக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களுக்கு பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி ஆயக்கட்டு பூமிக்கு, முதல் போக நஞ்சை பயிருக்கு ஆக., 15 முதல், டிச., 15 வரையும், 2ம் போகத்து புன்செய் பயிருக்கு டிச., 15 முதல் மார்ச், 15 வரை நீர் திறப்பது விதியாகும். நடப்பாண்டு, முதல் போகத்துக்கு ஆக., 15ல் முதல், 120 நாட்களுக்கு ஒற்றைப்படை மதகுகள், சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் இரட்டைபடை மதகுகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தலைமை பொறியாளர் அனுமதிப்படி கூடுதலாக, 15 நாட்களுக்கு கால நீட்டிப்பு செய்து, தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. தற்போது விவசாய சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, கீழ்பவானி 2ம் போகம் இரட்டை படை மதகுகள், சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் ஒற்றைப்படை மதகுகளின் பாசனத்துக்கும் பவானிசாகர் அணையில் இருந்து வரும், 10 காலை, 8:00 மணி முதல் மே, 1 காலை, 8:00 மணி வரை தண்ணீர் திறக்க ஒத்திசைவு
அனுப்பப்படுகிறது. இப்பாசனத்துக்கு உட்பட்ட, 1 லட்சத்து, 3,500 ஏக்கர் நிலங்களுக்கு வரும், 10 முதல் மே, 1 வரை 12,000 மில்லியன் கனஅடி தண்ணீர் தேவைப்படுகிறது. இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement