அமைதியாக முடிந்த புத்தாண்டு கொண்டாட்டம்
ஈரோடு, ஜன. 2-
ஈரோடு மாவட்டத்தில், ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தில் போக்குவரத்து விதிமுறை மீறியதாக வழக்குகள் ஏதும் பதியவில்லை. மேலும் விபத்துகளில் உயிரிழப்பு இன்றி, அமைதியாக நிறைவு பெற்றதால் போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
ஆங்கில புத்தாண்டு பிறப்பு ஈரோடு மாவட்டத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஈரோடு ப.செ.பார்க் சி.எஸ்.ஐ., சர்ச் முன் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு, தனித்தனி குழுக்களாக பிரிந்து, கேக் வெட்டி ஆங்கில புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். மதுபோதையில் வாகனம் ஓட்டியது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது தொடர்பாக எவ்வித வழக்கும் பதிவாகவில்லை.
மாவட்ட போலீஸ் அதிகாரிகள் கூறுகையில்,' மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சாலை விபத்துகள் ஏதும் ஏற்படவில்லை. போக்குவரத்து விதி மீறியதாகவும் எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. புத்தாண்டு அமைதியான முறையில் கொண்டாடப்பட்டது. மாவட்டத்தில் போலீசார் வாகன தணிக்கை, கண்காணிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டதே இதற்கு காரணம்,' என்றனர்.