இனி எல்லாம் சுகமாகட்டும்...2025 வரமாகட்டும் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் மக்கள்

'இப்பதான் 2024ம் ஆண்டு பிறந்தது போல் இருந்தது. அதற்குள் டிச.31 வந்துவிட்டதா' என ஆச்சரியப்படும் அளவிற்கு காலம் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் 2024 மறக்க முடியாத ஆண்டாக அமைந்திருக்கும். சிலருக்கு 'நெருக்கடி' ஆண்டாகவும், பலருக்கு 'பவர்புல்' ஆண்டாகவும் இருந்திருக்கும். பிறக்கப்போகும் 2025 சுகமான, வளமான வரம் தரும் ஆண்டாக அமையட்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பும், வேண்டுதலும். 2024 எப்படி இருந்தது. 2025 எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து மக்கள் என்ன கூறுகிறார்கள்...

அரசு ஊழியருக்கு ஏமாற்றமே

எல். விஜயராமலிங்கம், மாவட்டத்தலைவர், அரசு ஊழியர் சங்கம், ராமநாதபுரம்: அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறோம். 2024ம் ஆண்டிலும் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி உள்ளோம். ஆனால் அரசு கண்டு கொள்ளவில்லை. முதல்வர் ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவராக இருக்கும் போது நல்லவராக தெரிந்தார். அரசு ஊழியர்களுக்கு எல்லாமல் செய்து தருகிறோம் என்றார். தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு எதுவும் செய்யவில்லை. 18 மாதங்கள் டி.ஏ., நிறுத்தி வைத்து திரும்ப தரவில்லை. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவில்லை. அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்கள் நியமிக்கின்றனர். 7 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளன. 3 பேர் வேலையை ஒரு ஊழியர் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் மிகுந்த மன உளச்சலுக்கு ஆளாகின்றனர். 2024ம் ஆண்டில் எங்களுக்கு ஏமாற்றமே தந்துள்ளது. வரும் 2025ம் ஆண்டிலும் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் தொடர்கிறது. கோரிக்கையை அரசு நிறைவேற்றினால் நல்ல ஆண்டாக அமையும் என எதிர்பார்க்கிறோம்.

புதிய வாய்ப்புகள் அதிகரிக்க வேண்டும்

என். கார்த்திகேயன், துறைத்தலைவர், கணினி துறை, செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி, ராமநாதபுரம்: 2024 ல் கல்வித்துறை உட்பட அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு பெரிதாக காலுான்றி விட்டது. உலக நாடுகள் தொழில் துறையில் முதலீடுகளை ஈர்த்துள்ளன. இருப்பினும் நம் நாட்டில் 2024ல் தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. பிறக்கும் 2025 ம் புத்தாண்டில் தொழில் துறையில் பல ஏற்றங்களை தரும் ஆண்டாகவும் அமைய வேண்டும். புதிதாக அனைத்து துறை சார்ந்த தொழில் நிறுவனங்கள் நிறைய வர வேண்டும். அப்போது வேலையில்லா திண்டாட்டம் குறைந்து படித்தவர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.

பெண்கள் தொழிலில் ஈடுபட வேண்டும்

எம்.ஜெயா காந்தி, தொழில் முனைவோர், பரமக்குடி: வரும் ஆண்டுகளில் அனைத்து பெண்களும் அனைத்து வகையான தொழில்களிலும் ஈடுபட வேண்டும். எனது கணவருடன் இணைந்து எங்களது நிறுவனத்தில் முழு நேரமாக பணியாற்றும் வாய்ப்பை பெற்றுள்ளேன். மேலும் 2025ல் ராமநாதபுரம் போன்ற பின் தங்கிய மாவட்டங்களில் விவசாயம் உள்ளிட்ட அடிப்படை தொழில்களை ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் அனைத்து வகையிலும் வியாபாரம் பெருக வாய்ப்பாக அமையும். தொடர்ந்து பெண்களின் வாழ்க்கைத் தரம் உயர ஏதுவாக இருக்கும்.

உலகில் அமைதி ஏற்படுத்த வேண்டும்

எம்.வசந்தி, செவிலியர், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்: 2024 ம் ஆண்டு பேரிடர்கள் நிறைந்த ஆண்டாக இருந்தது. பருவ நிலை மாற்றத்தால் பருவமழை தவறி பெய்தது. அதிகளவு மழை காரணமாக துாத்துக்குடி, திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்கள், சென்னை உள்ளிட்ட நகரங்கள் பாதிப்புக்குள்ளாகின. இதன் காரணமாக மக்களும், விவசாயிகளும் பாதிக்கப்பட்டனர். பேரிடர்களால் உயிரிழப்பும் 2024ல் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். உலகம் முழுவதும் போர் அபாயங்கள் அதிகரித்தது. சிரியா பாலஸ்தீன போர். ரஷ்யா உக்ரைன் போர் மேகங்களாலும் மக்கள் பாதிக்கப்பட்டனர். விபத்துக்களும் அதிகமாக நடந்து துயரம் நிறைந்த ஆண்டாக இருந்தது. 2025ம் ஆண்டு மக்களுக்கு மகிழ்ச்சியை வழங்கும் ஆண்டாக இருக்க வேண்டும். இளைஞர்களுக்கு வளமான ஆண்டாக அமைய வேண்டும். கொரோனா போன்ற பெருந்தொற்று நோய்கள் இல்லாத ஆண்டாகவும், உலகில் அமைதியை ஏற்படுத்தும் ஆண்டாகவும், பேரிடர் நிகழாத ஆண்டாகவும் இருக்க வேண்டும்.

சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்

என்.ஈஸ்வரன், டிரைவர், அரசு போக்குவரத்து கழகம்: 2024ம் ஆண்டு பெரிய பஸ் விபத்துக்கள் இல்லை. 2025 ம் ஆண்டு விபத்துகள் இல்லாத ஆண்டாக அமைய வேண்டும். 2025ல் கூலி தொழிலாளர்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க அரசு நடவடிக்கை வேண்டும். லஞ்சம், ஊழல் ஒழிந்து அமைதி நிலவ வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். இயற்கை சீற்றம் இன்றி மக்கள் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும். நிலத்தை பாழ்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்த வீடுகளில் மழை நீர் சேகரிப்பை ஏற்படுத்த வேண்டும்.

மீனவர் பிரச்னைக்கு தீர்வு

எம்.ரவிக்குமார்,லாட்ஜ் உரிமையாளர் சங்கம் நிர்வாகி, ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து இல்லாததால் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வருகை 20 சதவீதம் குறைந்தது. மேலும் சாலை மார்க்கமாக வந்த வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் 2024ல் ராமேஸ்வரம் பகுதியில் தொழில், பொருளாதார வளர்ச்சி பாதித்தது. மேலும் இலங்கை கடற்படை கெடுபிடியால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் பல இன்னலுக்கு ஆளாகினர். இதற்கு தீர்வு காண 2025ல் மத்திய, மாநில அரசுகள் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமேஸ்வரத்திற்கு விரைவில் ரயில் போக்குவரத்து துவக்க வேண்டும். இங்கு போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சுற்றுச்சாலையும், தனுஷ்கோடியில் பார்க்கிங் வசதி, அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். 2025ல் சாதி, மதம் பாகுபாடின்றி அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் இருந்து நாட்டில் அமைதி ஏற்படவும், பொருளாதார வளர்ச்சி அடையவும் பாடுபட வேண்டும்.

பசுமை, செழிப்பு மிகுந்த ஆண்டு

-----------------வை.சஞ்சய் காந்தி, தென்னை விவசாயி,சின்னாண்டி வலசை, திருப்புல்லாணி: ---------------------நடந்து முடிந்தவை நல்லதாகவே இருக்க வேண்டும். நடப்பவை பசுமையாகவும் செழிப்பு மிகுந்த ஆண்டாக இருக்க வேண்டும். கடந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு மழை பெய்தாலும் தேங்காய்க்கு உரிய விலை கிடைக்கவில்லை. உற்பத்தி செலவுகள் அதிகமாக இருந்தாலும் அதற்கேற்றவாறு லாபங்கள் பெற முடியவில்லை. விலைவாசி உயர்வு, அன்றாட ஏழை மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது. அதிக விளைச்சல் இருந்தாலும் அவற்றை உற்பத்தி செய்யக்கூடிய விவசாயிகளுக்கு உரிய நலனை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். தற்போது மக்களிடையே வாங்கும் சக்தி அதிகரித்துள்ளது. பெரும்பாலான விவசாயிகள் தங்களுக்கான விளைபொருளை சந்தைப்படுத்தும் நிலைக்கு வந்துள்ளனர். 2024ல் எதிர்பார்த்த பருவ மழை பெய்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. அதேபோல் வரக்கூடிய ஆண்டிலும் நல்ல பருவ மழை பெய்ய வேண்டும். விவசாயம் செழிக்க வேண்டும். உற்பத்தி பெருக வேண்டும். விவசாயிகளுக்கான உரிய வழிகாட்டுதலை அரசு வழங்கிட வேண்டும் என்றார்.

பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம்

---------------------பி. பரமேஸ்வரி, குடும்பத் தலைவி, கடலாடி: -----------------ஒவ்வொரு துறையிலும் பெண்கள் சாதித்து வருவது ஒரு நாட்டின் வெற்றிக்கான கருத்தாக முன்வைக்கப்படுகிறது. தொழில் துறையிலும், இயற்கை சார்ந்த விவசாயத்திலும், கம்ப்யூட்டர் பயன்பாட்டிலும், தகவல் தொழில்நுட்பத் துறையிலும் பெண்களின் பங்கு அளப்பரியதாகும். பெண்களுக்கான பாதுகாப்பு, தன்னம்பிக்கை, கருத்து சுதந்திரம் உள்ளிட்டவைகள் சிறப்பு தகுதிகளாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் 2024 சிறப்பு வாய்ந்த ஆண்டாக விளங்கியது. அதே போன்று வரக்கூடிய 2025 ஆங்கில புத்தாண்டும் பெண்களுக்கான சுய முன்னேற்றம், கூட்டு முயற்சி, சமூக பொது நல அக்கறையுடன் சிறந்து விளங்க வேண்டும். இருள் நீங்கி ஒளி கிடைப்பது போன்று சிறந்த கருத்துக்களாலும் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியாலும் சிறக்க வேண்டும். பெண்களுக்கான முன்னேற்றத்தில் அனைவருக்கும் பங்கு உண்டு என்றார்.

நோயற்ற ஆண்டாக அமைய வேண்டும்

ஏ.ராமநாதன், அரசு டாக்டர், ஆர்.எஸ்.மங்கலம்: 2020-21ல் கொரோனா தொற்றால் நாட்டில் பெரும்பாலானோர் பாதிப்பிற்கு உள்ளாகியதால் நாட்டின் பொருளாதாரம் மட்டுமின்றி பொதுமக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. 2024ல் இந்தப் பிரச்னைகளில் இருந்து சாமானியர்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரம் உயரத் துவங்கியுயதுடன் பொதுமக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். 2025ல் கடந்த ஆண்டுகளை விட மக்களின் வாழ்க்கை திறன், வருவாய் உயர்வு, தொற்று நோயில்லாத வாழ்வு உள்ளிட்டவைகள் சிறக்கும் ஆண்டாக அமைய வேண்டும். மேலும் அரசின் காப்பீடு திட்டங்கள் பயன்பாடு குறித்து கற்றோர் மட்டுமே விழிப்புணர்வுடன் பயன்படுத்தும் நிலை உள்ளது. கிராமப்புற மக்கள் காப்பீட்டு திட்டத்தில் பயனடையும் வகையில் 2025-ல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் ஏழை குடும்பத்தினரின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும். அம்மை, கக்குவான் உள்ளிட்ட பல்வேறு நோய் தொற்றை தடுக்கும் வகையில் குழந்தைகளுக்கு பள்ளிகள் வழியாக தடுப்பூசிகள் போடுவதற்கு பெற்றோர் ஒத்துழைப்பு வழங்கும் ஆண்டாக அமைய வேண்டும்.

வணிகர் நலன் காக்க வேண்டும்:

கருப்புசாமி, முன்னாள் வர்த்தக சங்க தலைவர், முதுகுளத்துார்: ஜி.எஸ்.டி.,யால் வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஜி.எஸ்.டி., வரிகளை குறைத்து வணிகர் நலன் காக்கப்பட வேண்டும். வாடகை கட்டடம், வீட்டு வரி கட்டடத்திற்கும் ஜி.எஸ்.டி., சேர்ப்பதால் வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே வணிகர்கள் பாதிக்கும் வகையில் இருக்கும் ஜி.எஸ்.டி.,யை குறைக்க வேண்டும். கடலில் வீணாகும் தண்ணீரை சேகரிக்கும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்து விவசாயம் பெருக வேண்டும். அதே போல் தனியார் மருத்துவமனை, பள்ளிகள் போல் அரசு கல்வி, மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட வேண்டும்.

Advertisement