அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதி
வால்பாறை,:கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சாலக்குடி - வால்பாறை ரோட்டில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளால், சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்கின்றனர். ஐந்து மாதங்களாக கேரள மாநிலம், அதிரப்பள்ளியில் பெய்த கனமழையால் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணியர் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால், இருமாநில சுற்றுலா பயணியர் நீர்வீழ்ச்சிக்கு செல்ல முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில், சில நாட்களாக கேரளாவில் மழைப்பொழிவு குறைந்து, பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் முதல் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து குறைந்த நிலையில், வனத்துறையினர் சுற்றுலா பயணியர்குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மழைப்பொழிவு குறைந்ததால் அதிரப்பள்ளி, சார்பா உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலா பயணியர் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே குளிக்க வேண்டும். அனுமதிக்கப்படாத இடங்களுக்கு செல்லேவோ, குளிக்கவோ கூடாது. காலை, 6:00 முதல் மாலை 6:00 மணி வரை மட்டுமே நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது' என்றனர்.