பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் திருமுறை பண்ணிசை விழா
பரமக்குடி: பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் கருணைபுரி கையிலாயநாதர் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் திருமுறை பண்ணிசை நடந்தது. சிவாகர தேசிக சுவாமிகள் அருளாசி நிகழ்த்தினார்.
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் 63 நாயன்மார்கள் சன்னதி உள்ளது. இங்கு சிவகாமி நடராஜ பெருமான் தனிச் சன்னதியில் மூலவராக வீற்றிருக்கிறார்.
இதன்படி நாயன்மார்கள் கண்ட அம்மையப்பன் என்ற வகையில் திருமுறை பண்ணிசை நிகழ்த்தப்பட்டது. சூரியனார் கோயில் ஆதீன அருட்குருநாதர், திருஞானசம்பந்தர் திருமடம் ஈரோடு ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள் அருளாசி வழங்கினார்.
முன்னதாக கோயிலில் இருந்து நடராஜரின் திருவீதி உலாவில் கயிலை வாத்தியம் முழங்க சிவனடியார்கள் பங்கேற்றனர். மாலை 6:30 மணிக்கு துவங்கிய திருமுறை பண்ணிசை இரவு 10:30 மணி வரை நடந்தது.
அப்போது ரிஷப வாகனத்தில் சுவாமிகள் எழுந்தருளிய நிலையில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வருக்கு பூஜைகள் நடத்தப்பட்டது.
சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள், பக்தர்கள் உட்பட கருணைபுரி கையிலாய நாதர் சிவனடியார் கூட்டத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.அன்னதானம் வழங்கப்பட்டது. இங்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மாலை 63 நாயன்மார்களுக்கு திருவிளக்கு ஏற்றி, தேவார திருவாசகம் பாடப்பட்டு வருகிறது.