தவிப்பு : தள்ளுவண்டியில் குப்பை சேகரிக்கும் அவலம்: பேட்டரி வண்டிகள் பழுதுக்கு தீர்வு வருமா

மாவட்டம் முழுவதும்உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகளில் 2019 முதல் துாய்மை பணியாளர்களுக்கு என பேட்டரி வாகனங்கள் தரப்பட்டது. இவை அடிக்கடி பழுதான போது பணியாளர்களே தங்கள் சொந்த பணம் போட்டு பழுது பார்த்து வந்தனர்.

இந்நிலையில் பெரும்பாலான நகராட்சிகளில் சுத்தமாக பேட்டரி வண்டிகள் பயன்பாட்டை இழந்து விட்டன. இதில் சில நகராட்சிகளில் நகர்மன்றங்களில் வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால் இன்று வரை புதிய பேட்டரி வண்டிகள் வாங்கவோ, அதை சீரமைக்கவோ செய்யவில்லை.

5 நகராட்சிகளில் விருதுநகர் நகராட்சியில் 36 வாார்டுகளிலும் இதே நிலைதான் உள்ளது. இதனால் தினசரி 2 கி.மீ.,க்கு மேல் தள்ளுவண்டியை கொண்டு குப்பையை சேகரித்து வருகின்றனர். ஊராட்சிகளில் குப்பை வாங்குவது போன்று நகர் பகுதிகளில் தள்ளுவண்டியை கொண்டு குப்பை சேகரிக்கும் அவல நிலை உள்ளது.

இதனால் துாய்மை பணியாளர்கள் உடல் வலியால் பாதிக்கப்படுகின்றனர். ஏற்கனவே துாய்மை பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் நகராட்சிகளால் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில் இது போன்று 2 கி.மீ., துாரத்திற்கு நடந்தும், வண்டியை தள்ளியும் குப்பையை சேரிக்க வற்புறுத்துவது ஒரு வகை மனித உரிமை மீறலாகவே உள்ளது.

இந்த நிலை அருப்புக்கோட்டை, சாத்துார், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சிகளிலும் உள்ளது. பழுதடைந்த பேட்டரி வண்டிகளை சரிசெய்து தீர்வு காண வேண்டும். முழுவீச்சில் துாய்மை பணிகளை செய்ய தேவையான பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்க வேண்டும்.

நிதி ஒதுக்கி இருந்தால் ஏன் சீரமைப்பு பணிகள் நடக்காமல் உள்ளது என்பதை மாவட்ட நிர்வாகம்விசாரிக்க வேண்டும். துாய்மை பணியாளர்கள் ஆணையம் தாமாக முன் வந்து இது போன்ற நகராட்சிகளின் அசவுகரிய அத்துமீறல்களை விசாரிக்க வேண்டும்.

மாவட்ட நிர்வாகம் பேட்டரி வண்டிகளையே பயன்படுத்தி நகராட்சி பகுதிகளில் குப்பை சேகரிப்பதை உறுதி செய்ய குழு அமைக்க வேண்டும்.

Advertisement