இடநெருக்கடியில் மெயின் பஜார்; தெருக்களில் டூவீலர் ஆக்கிரமிப்பு திண்டாடும் விருதுநகர் மக்கள்
விருதுநகர்: விருதுநகர் நகராட்சியின்முக்கிய வீதியான மெயின் பஜார் ஆக்கிரமிப்பால் சுருங்கி கடும் இடநெருக்கடியில் தள்ளாடி வரும் சூழலில், அதையொட்டியுள்ள அனைத்து தெருக்களிலும் டூவீலர்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் தீராத தலைவலியாய் திண்டாட்டத்தை ஏற்படுத்தி வருகிறது.
விருதுநகரில் காய்கறி மார்க்கெட் இடநெருக்கடியான சூழலில் இயங்கி வரும் நிலையில் புதிய காய்கறி மார்க்கெட் கட்ட ராமமூர்த்தி ரோடு கமிஷனர் குடியிருப்பு பின்புறம் உள்ள மைதானம் 2 ஆண்டுகளுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்டது. தற்போது வரை பணிகள் துவங்கப்படாத நிலை உள்ளது.
தாமதம், இடநெருக்கடியால் மக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே வணிக வளாகத்தை கட்ட முனைப்பு காட்டி வருகிறது. ஆனால் அதற்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை.
விருதுநகர் காய்கறி மார்க்கெட் உள்ள மெயின் பஜாரும் மிகவும் நெருக்கடியான சூழலில் இயங்கி வருகிறது. வெள்ளை கோடுகள் போட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றினாலும் மீண்டும் மீண்டும் ஆக்கிரமிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. முக்கிய வணிகத்தளமாக இருப்பதால் மக்கள் இதை தவிர்க்க முடியாத சூழலும் உள்ளது.
விருதுநகரின் புகழே வியாபாரம் தான். இத்தகைய சூழலில் வியாபாரத்தை ஆக்கிரமிப்புகள்பாதிக்க கூடாது. தற்போது நிலவும் நெருக்கடி, ஆக்கிரமிப்பு மக்களை மூச்சு திணற செய்து அல்லாட வைக்கின்றன. வியாபாரத்தை பாதுகாக்க மெயின் பஜாருக்கு செல்லும் வாகன ஓட்டிகளுக்கு போதிய நிறுத்த வசதி அவசியமாகிறது.
இது மாநில நெடுஞ்சாலை என்பதால் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டியது அவசியமாக உள்ளது. மார்க்கெட்டும், மெயின் பஜாரும் மக்களை திக்குமுக்காட செய்கிறது.
முன்பு மெயின் பஜார் மட்டுமே போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும். தற்போது மதுரை ரோடு, நகராட்சி அலுவலகரோடும் ஆக்கிரமிப்புகளால்போக்குவரத்து நெரிசலை சந்தித்து வருகிறது. குறிப்பாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இடமாற்றம் செய்யப்பட்டதால் ரோட்டில் தான் பலர் டூவீலரை நிறுத்தும் நிலை உள்ளது.
மாவட்டத்தின் முன்னோடி வங்கி என்பதால் திங்கள் கிழமைகளில் அதிகம் பேர் வங்கிக்கு வருகின்றனர். இவர்கள் அனைவரது டூவீலரும் ரோட்டில் தான் நிறுத்தப்படுகின்றன. இதே போல் தெப்பம் சுற்றிலும் டூவீலர்கள் ரோட்டில் நிறுத்தப்படுகின்றன.
காய்கறி மார்க்கெட், மெயின் பஜார் கடைகளுக்கென தனியே வாகன நிறுத்த வசதி இல்லை. தேசப்பந்து மைதானத்தையும் சிறு சிறு கடைகள் ஆக்கிரமித்துள்ளதால் சீக்கிரத்திலே டூவீலர் நிறுத்தம் நிறைந்து விடுகிறது. இதனால் காய்கறி வாங்க வருவோர் தெப்பத்தை சுற்றிலும் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.
இன்னொரு பக்கம் மதுரை ரோடு, நகராட்சி அலுவலக ரோடுகளில் லாரிகள் பகல் நேரங்களில் நிறுத்தி பொருட்களை ஏற்ற, இறக்க செய்கின்றனர்.இதனாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
வாகன நிறுத்த வசதி வேண்டும்
பாலமுருகன், பா.ஜ., பட்டியல் அணி மாவட்ட தலைவர், விருதுநகர்: விருதுநகர் நகராட்சி பகுதிகளில் டூவீலர்கள் ஆக்கிரமிப்பது தொடர்கதையாக உள்ளது. தெருக்களில் போதிய இடமில்லை. பெரும்பாலான தெருக்கள் குறுகலாக உள்ளன. அதே நேரம் வாகனங்கள் பெருகி விட்டன. எனவே நகரமைப்பு பிரிவினர் டூவீலர் ஆக்கிரமிப்புகளை தடுத்து வாகன நிறுத்த வசதி ஏற்படுத்த வேண்டும்.
நெருக்கடிக்கு ஆளாகும் வீதி
நெல்சன் தாஸ், ஆசிரியர்,விருதுநகர்: நாளுக்கு நாள் முக்கிய வீதிகளில் ஆக்கிரமிப்பு அதிகரித்து கொண்டே போகிறது. அறிவித்த படி மார்க்கெட்டை இடமாற்றினால் நெருக்கடி குறையும். மக்கள் கோரிக்கைகளுக்கு நகராட்சி நிர்வாகம் செவிசாய்த்து ஆக்கிரமிப்புகளை கட்டுப்படுத்தி போக்குவரத்து ஏற்றதாக மாற்ற வேண்டும்.
தீர்வு
ரோடுகளை ஆக்கிரமிக்கும் டூவீலர்களை அதன் குறிப்பிட்ட எல்லைக்குள் நிறுத்தவும், நகரமைப்பு அலுவலர் ஆய்வு நடத்தி வாகனங்கள் நிறுத்த ஏதாவது மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையெனில் இப்பகுதிகள் நாளடைவில் நெரிசலில் ஸ்தம்பிக்கவே வாய்ப்புள்ளது. மெயின் பஜாரின் வியாபாரத்தை பாதிக்காத வகையில் அங்கு வாகனங்களை நிறுத்துவது அவசியம். தேசப்பந்து மைதானத்தில் வாகனங்கள் நிரம்பி வழிகின்றன. புதிய வாகன நிறுத்துமிடம் தேவை.
அதே போல் மார்க்கெட்டை மெயின் பஜாரில் இருந்து வேறுஇடத்திற்கும்மாற்றுவது காலத்தின் கட்டாயமாகிறது. நகராட்சி நிர்வாகம் மக்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும்.