கூட்டத்தை புறக்கணித்து பேரூராட்சி முன் அமர்ந்து கவுன்சிலர் போராட்டம் முறைகேடுகளை கண்டிப்பதால் புறக்கணிப்பு என புகார்

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பேரூராட்சி கூட்டத்தை புறக்கணித்த 10வது வார்டு கவுன்சிலர் மீனாட்சி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினார்.

பேரூராட்சி முறைகேடுகளை கண்டிப்பதால் தன்னையும், தனது வார்டையும் புறக்கணிப்பதாக புகார் தெரிவித்தார்.

ஆண்டிபட்டி பேரூராட்சி கூட்டம் தலைவர் சந்திரகலா (தி.மு.க.) தலைமையில் நடந்தது.

துணைத் தலைவர் ஜோதி, செயல் அலுவலர் சுருளிவேல் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் இந்திய கம்யூ.,கட்சியை சேர்ந்த 10 வது வார்டு கவுன்சிலர் மீனாட்சி கூட்டத்தை புறக்கணிப்பு செய்து அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.

பேரூராட்சி கூட்டத்திற்கு தனக்கு முறையான அழைப்பு வழங்கவில்லை,பேரூராட்சி நிர்வாகத்தின் முறைகேடுகளை கண்டிப்பதால் தன்னையும் தனது வார்டுக்கான பணிகளையும் பேரூராட்சி நிர்வாகத்தினர் புறக்கணிப்பதாக தெரிவித்து தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். பேரூராட்சி கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றிய பின் கூட்டம் முடிந்தது. இதனைத் தொடர்ந்து கவுன்சிலர் மீனாட்சியும் அங்கிருந்து சென்றார்.

செயல் அலுவலர் சுருளிவேல் கூறியதாவது: கூட்டம் குறித்து பேரூராட்சியில் உள்ள 18 வார்டு கவுன்சிலர்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது. பேரூராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த விபரங்களை கவுன்சிலர் மீனாட்சி கேட்டிருந்தார். அது வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தை புறக்கணித்து செய்து வெளிநடப்பு செய்தார். அவருக்கு தேவையான ஆவணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு கூறினார்.

Advertisement