சிவகங்கை நகராட்சி பகுதியின் எல்லை 39.94 சதுர கிலோ மீட்டராக விரிவடையும் மக்கள் தொகை 83,366 உயரும்
சிவகங்கை: சிவகங்கை நகராட்சியுடன் காஞ்சிரங்கால், வாணியங்குடி ஊராட்சியை இணைத்ததன் மூலம் நகராட்சி எல்லை 6.97 சதுர கிலோ மீட்டரில் இருந்து 39.94 சதுர கிலோ மீட்டராக விரிவடையும் பட்சத்தில் மக்கள் தொகையும் 83,366 ஆக அதிகரிக்க உள்ளது.
சிவகங்கை நகராட்சியின் கீழ் 27 வார்டுகளின் மக்கள் தொகை 48,495. நகராட்சியின் எல்லை 6.97 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளது.
இந்நகராட்சியின் எல்லையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றினர்.
இதையடுத்து அரசு, சிவகங்கை நகராட்சியுடன் வாணியங்குடி, காஞ்சிரங்கால் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை இணைக்க உத்தரவிட்டது.
காஞ்சிரங்கால் ஊராட்சியில் காஞ்சிரங்கால், அரசனி கீழமேடு, எம்.ஜி.ஆர்., நகர், அசிசிநகர், அரசனிபட்டி, இலந்தக்குடிபட்டி, காமராஜர் நகர், சஞ்சய் நகர், டி.புதுார், தென்னலிவயலை சேர்ந்த 8.60 சதுர கிலோ மீட்டர் பரப்பும், வாணியங்குடி ஊராட்சியில் வாணியங்குடி, கீழ, மேல வாணியங்குடி, இந்திரா நகர், அண்ணாமலைநகர், கூத்தாண்டன், அழகு மெய்ஞானபுரம், ஆயுதப்படை குடியிருப்பு, குறிஞ்சிநகர், அண்ணாநகர், சீனிவாச நகர், சமத்துவபுரம், பழமலைநகர், பையூர், காட்டுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளை சேர்ந்த 14.37 சதுர கிலோ மீட்டர் பரப்பும் இணைக்கப்படும்.
இதன் மூலம் சிவகங்கை நகராட்சியின் எல்கை 39.94 சதுர கிலோ மீட்டராக அதிகரிக்கும்.
மக்கள் தொகையும் 83,366 ஆக கணக்கிடப்படும். அரசின் விதிகளுக்கு உட்பட்டு இனி சிவகங்கை நகராட்சியில் வார்டுகளின் எண்ணிக்கை அதிகபட்சமாக 36 வரை உயர்த்தப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.