தேசிய சப் - ஜூனியர் நெட்பால் போட்டி ஆண்கள் பிரிவிலும் தமிழகம் சாம்பியன்
சென்னை, தமிழ்நாடு அமெச்சுர் நெட்பால் சங்கம், இந்திய நெட்பால் சம்மேளனம் மற்றும் ஆர்.எம்.கே., ரெசிடென்ஷியல் பள்ளி இணைந்து நடத்திய, தேசிய சப் - ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் தொடர், நேற்று முன்தினம் மாலை நிறைவடைந்தது.
இருபாலரிலும், 28 மாநிலங்களைச் சேர்ந்த, 54 அணிகள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தின. நேற்று முன்தினம் மாலை நடந்த ஆண்களுக்கான முதல் அரையிறுதியில் தமிழக அணி, 25 - 19 என்ற கணக்கில் தெலுங்கானாவை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
மற்றொரு அரையிறுதியில் கேரளா, 21 - 19 என்ற கணக்கில் ஹரியானாவை தோற்கடித்து தகுதி பெற்றது. இறுதிப் போட்டியில், தமிழகம் மற்றும் கேரளா அணிகள் மோதின.
விறுவிறுப்பான ஆட்டத்தில், இரு அணிகளும் ஆரம்பத்தில் இருந்தே புள்ளிகளை குவித்து சமநிலையில் தொடர்ந்தன. இதனால், 'வெற்றி என்பது மதில் மேல் பூனை' என்பது போன்று மாறியது. முடிவில், 29 - 26 என்ற மூன்று புள்ளிகள் வித்தியாசத்தில், தமிழக அணி த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. ஏற்கனவே, பெண்கள் பிரிவிலும் தமிழக அணி முதலிடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நடந்த மூன்றாம் இடத்திற்கான போட்டியில், தெலுங்கானா அணி, 24 - 22 என்ற கணக்கில் ஹரியானாவை வீழ்த்தி கைப்பற்றியது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, ஆர்.எம்.கே., கல்வி குழும தலைவர் முனிரத்தினம் கோப்பைகளை வழங்கினார்.