சேலையூர் வாலிபர் கொலை வழக்கு நண்பர்களே தீர்த்துக்கட்டியது அம்பலம்

சேலையூர்,சேலையூர், இந்திரா நகரைச் சேர்ந்தவர் சூர்யா, 21; வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவர், நேற்று முன்தினம், மப்பேடு - ஆலப்பாக்கம் பிரதான சாலையில், புத்துார் அருகே காலி இடத்தில் கை, கால் கட்டப்பட்டு, கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இது தொடர்பாக, சேலையூர் போலீசார் விசாரணை நடத்தி, அகரம்தென் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சபரிகணேசன், 25, சேலையூர், குட்டக்கரையைச் சேர்ந்த மீன் வியாபாரி அய்யப்பன், 26, குரோம்பேட்டை கோதண்டம் நகரைச் சேர்ந்த விஜயபிரதாப், 23, ஆகிய மூன்று பேரை, நேற்று கைது செய்தனர்.

விசாரணைக்கு பின் போலீசார் கூறியதாவது:

சம்பவ தினத்தில், சேலையூர், இந்திரா நகர் அருகே உள்ள 'டாஸ்மாக்' கடையில், சூர்யா, சபரி கணேஷ், அய்யப்பன் ஆகியோர், ஆட்டோவில் மது அருந்தியுள்ளனர். போதை ஏறியதும், மூவரும் குரோம்பேட்டையில் உள்ள விஜயபிரதாப் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்கு நான்கு பேரும் சேர்ந்து, மீண்டும் மது அருந்தினர். அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த மூவரும், சூர்யாவை இரும்பு பைப்பால் அடித்து, கத்தியால் கழுத்தை அறுத்துள்ளனர்; சூர்யா இறந்துள்ளார்.

மூவரும் சூர்யா உடலை, துணி மற்றும் பிளாஸ்டிக் கவர்களால் கட்டி, மப்பேடு - ஆலப்பாக்கம் பகுதியில் சாலையோரம் வீசி விட்டு சென்றுள்ளனர்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement