'ஜல் ஜீவன்' திட்டத்தில் 17,171 வீடுகள் பாக்கி பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
- நமது நிருபர் -
''ஜல் ஜீவன் திட்டத்தில், 675 குக்கிராமங்களுக்கு, 17 ஆயிரத்து, 171 வீடுகளுக்கு, குடிநீர் இணைப்பு வழங்கப்பட வேண்டியுள்ளது; நிலுவை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்'' என்று மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் (திஷா), கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். எம்.பி.,க்கள் சுப்பராயன்(திருப்பூர்), ஈஸ்வரசாமி (பொள்ளாச்சி), பிரகாஷ்(ஈரோடு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் சாமிநாதன், மாவட்ட அளவில் நடைபெற்றுவரும் மத்திய அரசு திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். துறைவாரியான அதிகாரிகளுடன் கலந்தாய்வு நடத்தி, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது.
ஊராட்சி பகுதிகளில், 15 வது மாநிலக்குழு மானியத்தில் நடக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். 'திஷா' கூட்டத்துக்கான ஆய்வு அறிக்கைகள், முழு விவரத்துடன் தயாரிக்கப்பட வேண்டும். பேரூராட்சிகளில் 'பணிகள் நடக்கிறது' என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.
என்ன பணி நடக்கிறது, எந்த பேரூராட்சியில் நடக்கிறது, பணியின் நிலை ஆகிய அனைத்து விவரங்களுடன் தெளிவான அறிக்கை தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும். நுாறு நாள் வேலை உறுதி திட்டத்தில், எதிர்பார்த்த அளவு குடும்பங்கள் பயனடையவில்லை.
100 நாள் திட்டம்
இந்நிதியாண்டில், 30 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் பயன்பெற வேண்டும்; இதுவரை, 10 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் மட்டும் பயனடைந்துள்ளன. இனிவரும் நாட்களில், அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். குறு, சிறு விவசாயிகளுக்கு மட்டும், நுாறு நாள் திட்டத்தில் விவசாய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அனைத்து விவசாயிகளுக்கும், இத்திட்டத்தில் விவசாய பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளை ஆராய வேண்டும்.
அங்கன்வாடி மையங்கள்
அனைத்து அங்கன்வாடி மையங்களும், அடிப்படை வசதி பெற்றிருக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள, 1,472 மையங்களிலும், சுற்றுச்சுவர், மின்சாரம் மற்றும் கழிப்பிட வசதி இருப்பதை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
'ஜல் ஜீவன்' திட்டத்தில், 675 குக்கிராமங்களுக்கு, 17 ஆயிரத்து, 171 வீடுகளுக்கு, குடிநீர் இணைப்பு வழங்கப்பட வேண்டியுள்ளது; நிலுவை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். குடிமங்கலம் ஒன்றிய பகுதிகளில், வேலை உறுதி திட்ட பணிகளில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.