நுால்- அஞ்சல் சேவை முறை திடீர் ரத்து: நுகர்வோர் எதிர்ப்பு

ராமேஸ்வரம்:இந்திய அஞ்சல் துறை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நுால் அஞ்சல் (புக் -போஸ்ட்) சேவையை ரத்து செய்ததால் புத்தக ஆர்வலர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தும் என நுகர்வோர் இயக்கத்தினர் தெரிவித்தனர்.

இந்திய அஞ்சல் துறையில் நாடு முழுவதும் 1 லட்சத்து 54 ஆயிரத்தி 725 தபால் நிலையங்கள் உள்ளன.

இதன் மூலம் பார்சல் சேவைகளை வெளியூர், வெளி மாநிலத்திற்கு ஒரு வாரத்திலும், உள்ளூருக்குள் அனுப்பும் பார்சல்களை அடுத்த நாளே டெலிவரி செய்தனர்.

இந்நிலையில் மாணவர்கள், மக்களிடம் கல்வி மற்றும் வாசிப்பு திறனை மேம்படுத்தும் வகையில் அஞ்சல் துறையில் நுால்- அஞ்சல் சேவையை அறிமுகம் செய்து சிறப்பாக செயல்படுத்தினர். தனியார் அஞ்சல் சேவையில் இல்லாத வசதி இந்த சேவையில் 5 கிலோ புத்தகங்களை அனுப்ப ரூ.80 மட்டுமே வசூலித்தனர்.

இந்த சேவையை நாடு முழுவதும் ஏராளமானோர் பயன்படுத்தினர். அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள், நாளிதழ், விசேஷ நிகழ்வு பத்திரிக்கைகள், மாதம், வார இதழ்கள், அனைத்திற்கும் இச்சலுகை பொருந்தியது.

ஆனால் எந்த முன் அறிவிப்பும் இன்றி டிச.18 முதல் நுால் அஞ்சல் சேவையை தபால் துறை ரத்து செய்தது. இதற்கு நுகர்வோர் இயக்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நுகர்வோர் கூட்டமைப்பு ராமேஸ்வரம் மண்டல செயலாளர் என்.ஜெயகாந்தன் கூறியதாவது:

நுால்-அஞ்சல் சேவை ரத்து செய்ததால் ஆன்லைனில் புத்தகம் வாங்கினால் பார்சலுக்கு கூடுதல் செலவு ஆகிறது. நுால் அஞ்சலில் கிலோவுக்கு ரூ.32 வசூலித்த நிலையில் தற்போது ரூ.78ம், இரண்டு கிலோவுக்கு ரூ.45ல் இருந்து ரூ.116 ஆகவும், 5 கிலோவுக்கு ரூ. 80ல் இருந்து ரூ. 229 செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

இதனால் ஆன்லைனில் புத்தகங்கள் வாங்கவோ, விசேஷ பத்திரிக்கைகள், இதழ்கள் அனுப்ப முடியாத சூழல் உள்ளது. இதன் காரணமாக வாசிக்கும் திறன் குறைந்து, அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படும்.

எனவே நுால் அஞ்சல் சேவையை மீண்டும் அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement