ஏரியின் நீர்வரத்து கால்வாய் தூர்வாரும் பணி மும்முரம்
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் திருப்புலிவனம் ஏரியில் இருந்து, மருத்துவன்பாடி ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் வாயிலாக வரும் ஏரி நீரை, அப்பகுதி விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர்.
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, கால்வாய் முறையான பராமரிப்பு இல்லாமல் இருந்து வருகிறது. கடந்த பெஞ்சல் புயல் மற்றும் வடகிழக்கு பருவ மழையால், திருப்புலிவனம் ஏரி நிரம்பியது.
இதிலிருந்து, உபரிநீரானது கலங்கல் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது, கால்வாய் தூர் வாராமல் இருப்பதால், இதில் வரும் உபரி நீரானது மருத்துவன்பாடி பகுதியில் உள்ள விளைநிலங்களை சூழ்ந்து, கரும்பு மற்றும் நெற்பயிர் ஆகியவை சேதமடையும் நிலை இருந்து வருகிறது.
இதுகுறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, நேற்று பொக்லைன் இயந்திரத்தின் வாயிலாக, மருத்துவன்பாடி ஏரி நீர்வரத்து கால்வாய், தூர்வாரும் பணி மும்முரமாக நடந்தது.