2 தனியார் பஸ்கள் சிறைபிடிப்பு


தலைவாசல், ஜன. 2-
தலைவாசல் அருகே மணிவிழுந்தான் பஸ் ஸ்டாப்பில், அனைத்து அரசு, தனியார் டவுன், மப்சல் பஸ்கள் நின்று செல்ல, போக்குவரத்து துறை மூலம் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் நேற்று மாலை, 4:00 மணிக்கு, சேலம், ஆத்துாரில் இருந்து, கள்ளக்குறிச்சி நோக்கிச்சென்ற, இரு தனியார் பஸ்களில், மணிவிழுந்தான் ஸ்டாப்பில் இறங்க வேண்டிய பயணியரை இறக்காமல், மேம்பாலம் வழியே செல்ல, டிரைவர்கள் முயன்றனர். இதையறிந்த அப்பகுதி மக்கள், அடுத்தடுத்து வந்த இரு பஸ்களையும் சிறைபிடித்து வாக்குவாதம் செய்தனர். பாலம் வழியே செல்வதை தவிர்த்து, ஸ்டாப்பில் பயணியரை இறக்கிவிட்டு செல்ல வேண்டும் என, மக்கள் தெரிவித்தனர். அரை மணி நேரத்துக்கு பின், இரு பஸ்களையும், மக்கள் விடுத்தனர்.
இதுகுறித்து மக்கள் கூறுகையில், 'சார்வாய், மணிவிழுந்தான் பகுதி மக்கள், மணிவிழுந்தான் ஸ்டாப்பில் தான் இறங்குவர். மப்சல் பஸ்கள், இந்த ஸ்டாப்பில் நின்று செல்ல, கலெக்டர், போக்குவரத்து அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் சில தனியார், அரசு பஸ்கள், மேம்பாலம் வழியே செல்வதால் சிரமப்படுகிறோம். இதுதொடர்பாக கலெக்டரிடம், புகார் அளிக்க உள்ளோம்' என்றனர்.

Advertisement