வரைபடமாக மாறிய அரக்கோணம் நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள், பகுதிவாசிகள் கடும் அவதி
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது உளுந்தை ஊராட்சி. இப்பகுதியில் உள்ள தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் தினமும், 25,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நெடுஞ்சாலையில், தண்டலம் முதல், காட்டு கூட்டு சாலை வரை நெடுஞ்சாலை பல பகுதியில் சேதமடைந்து மோசமாக உள்ளது.
குறிப்பாக, ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்துக்குட்பட்ட மண்ணுார், வளர்புரம் பகுதியில் நெடுஞ்சாலை சேதமடைந்து பல இடங்களில் வரைபடம் போல் மாறியுள்ளது. இதனால் வாகன ஒட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் சில நேரங்களில் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.
மோசமான நெடுஞ்சாலையால், இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையை ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.