சென்னைக்கு திரும்பும் வாகனங்கள் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்
அச்சிறுபாக்கம்:செங்கல்பட்டு மாவட்ட எல்லை முடிவில் அச்சிறுபாக்கம் அருகே, சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ஆத்துார் சுங்கச்சாவடி அமைந்துள்ளது.
தென் மாவட்டங்களை செங்கல்பட்டு மாவட்டத்துடன் இணைக்கும் மிக முக்கிய பிரதான தேசிய நெடுஞ்சாலையான இதில்,
சாதாரண நாட்களில் நாள்தோறும், 50,000க்கும் அதிகமான வாகனங்கள், இரு மார்க்கத்திலும் கடந்து செல்கின்றன.
இந்த சுங்கச்சாவடியில், சென்னை மார்க்கத்தில் 5 வாகனங்கள் கடக்கும் வகையிலும், திண்டிவனம் மார்க்கத்தில் 5 வாகனங்கள் கடக்கும் வகையிலும், மொத்தம் 10 'டிராக் லைன்'கள் உள்ளன.
வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில், இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.
அந்த வகையில், அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் புத்தாண்டு விடுமுறைக்கு தென் மாவட்டங்களுக்கு கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்ற பொதுமக்கள் விடுமுறை முடிந்து, நேற்று சென்னைக்கு புறப்பட்டுச் செல்கின்றனர்.
இதன் காரணமாக, ஆத்துார் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதிகப்படியான வாகனங்கள், மாலை நேரத்தில் வந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
காலை முதல் மாலை 5:00 மணி வரை, 70,000க்கும் அதிகமான வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்து, சென்னை நோக்கிச் சென்றன.
இரவு நேரங்களில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில், போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.