அமெரிக்காவில் கூட்டத்துக்குள் பாய்ந்த வாகனம்: 10 பேர் பலி பயங்கரவாத தாக்குதலா?
நியூ ஓர்லென்ஸ் அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, மக்கள் கூட்டத்திற்குள் வேன் புகுந்ததில், 10 பேர் பலியாகினர்; 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில், புலனாய்வு அமைப்பான, எப்.பி.ஐ., விசாரித்து வருகிறது.
அமெரிக்காவில் லுாசியானா மாகாணத்தின் நியூ ஓர்லென்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நேற்று களைகட்டின. அந்த நகரின் முக்கிய சுற்றுலா தலமான போர்பன் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, புத்தாண்டை உற்சாகமாகக் கொண்டாடினர்.
அப்போது அங்கு வந்த ஒரு வேன், கூட்டத்திற்குள் திடீரென புகுந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள், அங்கும் இங்கும் அலறியபடி ஓடினர்.
அப்போது தாறுமாறாக வேனை ஓட்டி வந்த டிரைவர், பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது.
தகவலறிந்து வந்த போலீசார், பதில் தாக்குதல் நடத்தினர். இதில், டிரைவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தில், 10 பேர் பலியாகினர்; இரண்டு போலீசார் உட்பட 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். இதற்கிடையே, இது பயங்கரவாத தாக்குதல் என அந்நகரின் மேயர் குற்றஞ்சாட்டினார். எனினும், அமெரிக்காவின் எப்.பி.ஐ., எனப்படும் புலனாய்வு அமைப்பு இதை முதலில் மறுத்தது.
இதுகுறித்து அதன் உயரதிகாரிகள் கூறுகையில், 'இது, பயங்கரவாத தாக்குதலாக இருக்க வாய்ப்பில்லை.
'எனினும், விபத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் அந்த டிரைவர் வாகனத்தை இயக்கியதாக கருதுகிறோம்' என்றனர்.
சிறிது நேரத்துக்குப் பின், எப்.பி.ஐ., அதிகாரிகள் கூறுகையில், 'சம்பவ இடத்தில், வெடிபொருள் கண்டறியப்பட்டுள்ளது. அதை, ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளோம். எனவே, இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம்.
'கூட்டத்துக்குள் காரை ஓட்டி, அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் நோக்கில் இந்த தாக்குதல் நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது' என்றனர்.