புத்தகங்கள் நம் தலைமுறை சொத்து
சென்னையில் நடந்துவரும் புத்தகக் காட்சியின் வெளி அரங்கில் நடந்த சிந்தனை அரங்கில் 'பெரிதினும் பெரிது கேள்' எனும் தலைப்பில், பேச்சாளர் பர்வீன் சுல்தானா பேசியதாவது:
எட்டு கோடி தமிழர்கள் வாழும் தமிழகத்தில், ஒரு புத்தகம் 1,000 பிரதிகள் அச்சடிப்பது அரிதாகிவிட்டது. இப்போது, 50 பிரதிகள் மட்டும் அச்சடிக்கும் வழக்கம் வந்துவிட்டது.
நாம் எங்கே இருக்க வேண்டும் என்ற தெளிவைக் கொடுப்பவை புத்தகங்கள்தான். உங்களுக்கென ஒரு திட்டம் வகுத்து, அந்தத் திட்டத்தால் உங்களை நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதைத் திட்டமிடுங்கள்.
ஆர்ப்பாட்டமான, நகைச்சுவையான பேச்சை ரசிக்கும் நாம், நம் வாழ்க்கையைப் புரட்டிப்போடும் சொல்லைக் கேட்பதில்லை. கவனச் சிதறலே இதற்கு காரணம். நம் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு மந்திரச் சொல், ஏதோ ஒரு புத்தகத்தில் ஒளிந்திருக்கிறது. அந்தப் புத்தகம் எது என்பதைத் தேடிக் கண்டறிய வேண்டும். அந்தப் புத்தகமும் நமக்காகவே காத்துக்கொண்டிருக்கும்.
விழிப்புணர்வோடு இருக்க, தடையாக இருப்பவற்றை தோற்கடிக்க வேண்டும். சோகம், மன முறிவு வாழ்க்கையில் இருக்கக்கூடாது.
ஓர் இலக்கை அடைய எதையெல்லாம் நாம் இழக்கிறோமோ, எதையெல்லாம் விட்டுக் கொடுக்கிறோமோ, அதுதான் அந்த இலக்கிற்கான உண்மையான விலை. பணத்தால் அதை மதிப்பிட முடியாது.
வாழ்க்கையில், உயரத்தை அடைய விதையாக இருந்தால் மட்டும் போதாது. வீரிய விதையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.