சூறாவளியால் தனுஷ்கோடி ரோட்டில் மணல் குவியல் பாம்பனில் கடல் கொந்தளிப்பு
ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் வீசிய சூறாவளியால் தேசிய நெடுஞ்சாலையில் மணல் குவிந்து சுற்றுலாப்பயணிகள் அவதிக்குள்ளாயினர். இதற்கிடையில் பாம்பனில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தன.
தனுஷ்கோடியில் 1964ல் வீசிய புயலில் இடிந்து போன சர்ச், கோயில், தபால் நிலையம், ரயில்வே ஸ்டேஷன் கட்டடங்களை காணவும், அரிச்சல்முனை கடற்கரை, கடல் அலையை கண்டு ரசிக்கவும் தினமும் ஏராளமான வாகனங்களில் பயணிகள் வருகின்றனர்.
இந்நிலையில் வடகிழக்கு பருவக்காற்று தீவிரமடைந்து சில நாட்களாக சூறாவளி வீசியது. தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே மணல் குவிந்துள்ளது. இதனால் சுற்றுலா வாகனங்கள் ரோட்டில் சிரமத்துடன் கடந்து செல்கின்றன. டூவீலரில் செல்பவர்கள் சறுக்கி விழும் நிலையுள்ளது.
போக்குவரத்து அதிகமுள்ள தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் விபரீதம் ஏற்படும் முன் மணல் குவியல்களை அகற்ற தேசிய நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாம்பனில் கடல் கொந்தளிப்பு: சில நாட்களாக ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடியில் மணிக்கு 40 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசியது. இதனால் பாம்பன் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு அதிக நீரோட்டத்துடன் ராட்சத அலைகள் எழுந்து கரையில் ஆக்ரோஷமாக மோதியது.
சூறாவளியால் ஜன., 1 முதல் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர். இதனால் ராமேஸ்வரம், பாம்பன் பகுதியில் படகுகளை பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி வைத்த மீனவர்கள் வேலையின்றி வீடுகளில் முடங்கினர்.