முட்டாஞ்செட்டி பஞ்., தலைவர் திறந்த அங்கன்வாடிக்கு பூட்டு போட்ட பி.டி.ஓ.,
எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியன், முட்டாஞ் செட்டி பஞ்., தலைவராக அ.தி.மு.க.,வை சேர்ந்த கமலபிரியாவும், துணைத்தலைவராக தி.மு.க.,வை சேர்ந்த சபாரத்தினமும் உள்ளனர்.
தலைவர், துணைத்தலைவருக்கு உள்ள கருத்து வேறுபாடால், கடந்த, 5 ஆண்டாக இந்த பஞ்.,ல் எந்த திட்டப் பணிகளும் முழுமை பெறாமல் உள்ளது. மேலும், பஞ்.,ல் நடக்கும் கிராம சபை கூட்டத்தில், தலைவர், துணைத்தலைவருக்கு மோதல் இருந்ததால், கிராம சபை கூட்டத் திலும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. கடந்த, 3 ஆண்டுக்கு முன் முட்டாஞ்செட்டியில் அங்கன்வாடி மையத்தை அனுமதியின்றி, பஞ்., தலைவர் இடித்ததாகவும், அங்கிருந்த பொருட்களை எடுத்து சென்றதாகவும், அப்போதைய பி.டி.ஓ., போலீசில் புகாரளித்தார்.இதுகுறித்து, கடந்தாண்டு கலெக்டர் உமா, இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், சமாதானம் செய்து வைத்து, பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என, அறிவுரை வழங்கினார். இந் நிலையில், முட்டாஞ்செட்டியில் இடிக்கப்பட்ட அங்கன்வாடி மைய கட்ட டத்திற்கு பதிலாக, புதிதாக, 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த அங்கன்வாடி மையத்தை, பஞ்., தலைவர் கமலபிரியா, நேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், அங்கு சென்ற பி.டி.ஓ., சுகிதா மற்றும் போலீசார், 'அங்கன்வாடி மையத்தை அதிகாரிகள் அனுமதியில்லாமல் திறக்க கூடாது' என, எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, திறக்கப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடத்தை, பி.டி.ஓ., மீண்டும் பூட்டி சாவியை எடுத்துச்சென்றார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து, பி.டி.ஓ., சுகிதா கூறியதா வது: அரசு நிதியில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த மையத்தை முறைப்படி எம்.எல்.ஏ., - எம்.பி., ஆகியோரிடம் தேதி வாங்கிய பிறகே திறக்கலாம் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தலைவர், நாளையுடன்(இன்று) பஞ்., நிர்வாகம் முடிவதால், இன்று காலை (நேற்று) ரிப்பன் வெட்டி திறந்து வைத்துள்ளார். ஆனால், மையத்தில் ஒரு சில பணிகள் முழுமை பெறாமல் உள்ளதால், அனைத்து பணிகளும் முடிந்த பிறகே திறக்கலாம் என முடிவு செய்து பூட்டி வைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.