அங்கன்வாடி முன் தேங்கும் நீர் குழந்தைகள் தினமும் தவிப்பு

சூணாம்பேடு, சூணாம்பேடு ஊராட்சி, வேளூர் கிராமத்தில் செயல்படும் அங்கன்வாடி முன் தண்ணீர் தேங்குவதால், குழந்தைகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட வேளூர் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி வளாகத்தில், அங்கன்வாடி மையம் செயல்படுகிறது.

இதில் 10 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கர்ப்பிணியர், பாலுாட்டும் தாய்மார்கள் என அதிகமானோர், இணை உணவு மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனையால் பயனடைந்து வருகின்றனர்.

அங்கன்வாடி மையம் அருகே ஏரிக்கரை உள்ளதால், ஊற்று ஏற்பட்டு அங்கன்வாடி மையம் எதிரே தொடர்ந்து குளம்போல தண்ணீர் தேங்குவதால், குழந்தைகள் கடும் அவதிப்படுகின்றனர்.

இதனால், அங்கன்வாடி மையம் எதிரே மண் கொட்டி உயர்த்தி அமைக்க, பலமுறை மனு அளித்தும், தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பருவமழை காரணமாக தற்போது அங்கன்வாடி மையம் முன் தண்ணீர் தேங்கி உள்ளதால், குழந்தைகள் கடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.

எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, அங்கன்வாடி மையம் எதிரே மண்கொட்டி உயர்த்தி சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement