ஜன.14ல் அவனியாபுரம், 15ல் பாலமேடு 16ல் அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டு மருத்துவக் காப்பீடு செய்ய வேண்டுமென வீரர்கள் கோரிக்கை

மதுரை : மதுரையில் ஜன. 14 பொங்கலன்று அவனியாபுரத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி துவங்குகிறது. ஜன.15ல் பாலமேடு, 16ல் அலங்காநல்லுாரில் அரசு சார்பில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கிறது. தங்களுக்கு மருத்துவக் காப்பீடு செய்ய வேண்டுமென மாடுபிடிவீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மதுரை பாலமேட்டில் நேற்று முன்தினம் அமைச்சர் மூர்த்தி தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தகால் நடும் பணி நடந்தது. அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லுாரில் வாடிவாசல், மாடுகள் சேகரிக்கப்படும் இடம், பார்வையாளர்கள், வெளிநாட்டு பார்வையாளர்கள் காலரி அமைக்கும் பணிகள் நடந்துவருகிறது.


அவனியாபுரத்தில் 1000 காளைகள், பாலமேட்டில் 1000, அலங்காநல்லுாரில் 900 காளைகள் களம் இறங்க தயாராக உள்ளன. முகூர்த்தகால் நட்ட நாளில் இருந்து காளைகளுக்கான பதிவும் துவங்கி விட்டது. போட்டி நடப்பதற்கு முதல்நாள் வாடிவாசல் செல்வதற்கு முன்பாக காளைகள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டது தானா என ஆய்வு செய்தபின் பரிசோதனை செய்து வாடிவாசலுக்கு அனுப்பப்படும்.

மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு குறித்த ஆலோசனை கூட்டம் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நாளை (ஜன.6) நடத்தப்படும். அதன் பின் வீரர்களுக்கான முன்பதிவு துவங்கும். அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லுாரில் தலா 500 வீரர்கள் முன்பதிவு செய்யலாம். கடந்தாண்டு இதே அளவு மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும்போது மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அறிவிப்பதோடு கார், பைக் பரிசுப்பொருட்களை அறிவிப்பதை தடை செய்ய வேண்டுமென மதுரையைச் சேர்ந்த தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பயிற்சி மைய நிறுவனர் மணிகண்டபிரபு தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

வீரத்தையும் பாரம்பரியத்தையும் அடையாளப்படுத்துவதற்காக தான் போட்டியே நடத்தப்படுகிறது. இரண்டு கார்களை பரிசாக வழங்குவதன் மூலம் பாரம்பரியத்தை சிதைத்து ஜல்லிக்கட்டு போட்டியை அழிவை நோக்கி செல்கின்றனர்.

வீரர்களை உதைக்கின்றனர்



காரை பரிசாக பெற ஆசைப்படுபவர்கள் ரூ.பல லட்சம் செலவு செய்து ஜல்லிக்கட்டு மாட்டை வாங்கி முதலீடு செய்கிறார்கள். பரம்பரையாக மாட்டை வளர்த்து போட்டியில் அவிழ்த்து விடுபவர்களின் காளைகளை யாரும் மதிப்பதில்லை. ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் போதே பணக்காரர்கள் அவிழ்த்து விடும் காளைகளை வீரர்கள் பிடிக்கும் போது பின்னாலேயே வந்து எட்டி உதைக்கின்றனர்.

ஆயிரம் மாடுகள் அவிழ்த்து விடும் போது 2 மாடுகள் மட்டும் தான் தகுதியான காளை என்று எந்த அடிப்படையில் முடிவு செய்து கார்களை பரிசாக தரமுடியும். மீதி 998 காளைகளும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தகுதியற்றது என்று சொல்வது அவமானப்படுத்தும் செயல்.

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

வீரர்கள் காயம்பட்டால் அங்கிருந்து ஸ்ட்ரெச்சரில் துாக்கி வந்து ஆம்புலன்சில்ஏற்றி அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர்.

ஆண்டுதோறும் ஆயிரத்திற்கு மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர் என்று தெரிந்தும் அவசர சிகிச்சைக்கான சகல வசதியுடன் ஒரு ஆம்புலன்ஸ் வாங்கி நிறுத்த வேண்டுமென யாரும் சிந்திக்கவில்லை. இந்த முறை அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

53 முறை விருது வென்ற வீரர்



மணிகண்ட பிரபு 1996ல் ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரராக களமிறங்கினார். இதுவரை 4000 மாடுகளை பிடித்த வீரர் என்ற பெருமையுடன் 53 முறை சிறந்த வீரருக்கான விருதை வாங்கியுள்ளார். அப்போதைய பரிசுப்பொருள் என்பது வேட்டி, துண்டு தான். தற்போது 16 காளைகள், 35 கன்றுகள் வளர்க்கிறார்.

Advertisement