கந்தசுவாமி கோவிலில் திருமணத்திற்கு பதிவு

திருப்போரூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் கோவில் நகரங்களில் ஒன்றாக, திருப்போரூர் விளங்குகிறது.

இங்குள்ள கந்த சுவாமி கோவிலில் திருமணம் செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

மேலும், கோவில் சார்பில் 2.36 கோடி ரூபாயில் திருமண மண்டபம், 50 லட்சம் ரூபாயில் பக்தர்கள் தங்கும் விடுதி, 49.80 லட்சம் ரூபாயில் பக்தர்கள் ஓய்வுக்கூடம் உள்ளது.

அதேபோல், திருப்போரூர் மற்றும் கோவில் மாட வீதிகளைச் சுற்றி 20க்கும் மேற்பட்ட தனியார் திருமண மண்டபங்களும் உள்ளன.

இதனால், இப்பகுதியில் முகூர்த்த நாட்களில், ஏராளமான திருமணங்கள் நடக்கின்றன. சில சமயம் ஒரே நாளில், 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடக்கின்றன.

இந்நிலையில், மார்கழி மாதம் முடிந்து இன்னும் 10 நாட்களில் தை மாதம் வருவதால், கோவிலில் திருமணம் நடத்துவதற்கான பணிகளில், பக்தர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

திருமணத்திற்கு விண்ணப்ப படிவம் பெற்றுச் செல்வதற்காகவும், முன்பதிவு செய்வதற்காகவும் மற்றும் விபரங்களை கேட்பதற்காகவும், ஏராளமான பக்தர்கள் கந்தசுவாமி கோவில் அலுவலகத்தில் குவிகின்றனர்.

இக்கோவிலில் திருமணம் செய்ய, மணமக்கள் மற்றும் பெற்றோர் ஹிந்துவாக இருக்க வேண்டும். திருமணத்திற்கு 30 நாட்களுக்கு முன் பதிவு செய்ய வேண்டும். திருமண பதிவுக்கு 2,000 ரூபாய், விண்ணப்ப படிவம் 100 ரூபாய், வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க 150 ரூபாய் செலுத்த வேண்டும்.

விண்ணப்ப படிவம் பெறும்போது, பள்ளி சான்றிதழ் அல்லது பிறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை அசல், நகல்களை சமர்ப்பிக்க வேண்டும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

Advertisement