ரூ.250ல் முழு உடல் பரிசோதனை செங்கை மருத்துவமனையில் துவக்கம்
செங்கல்பட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், முழு உடல் பரிசோதனை மையம் துவக்கப்பட்டு உள்ளது. இம்மையத்தில், 250 ரூபாய் கட்டணத்தில் பரிசோதனை செய்யப்படுவதால், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் விபத்து அவரச சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு, இதய பிரிவு, குழந்தைகள் நல வார்டு உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை பிரிவுகள் தனித்தனியாக உள்ளன.
இம்மருத்துவமனைக்கு செங்கல்பட்டு மாவட்டம் மட்டுமின்றி காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வந்து சிகிச்சை பெறுகின்றனர்.
தினமும், புறநோயாளிகளாக 3,000க்கும் மேற்பட்டவர்களும், உள்நோயாளிகளாக 1,700க்கும் மேற்பட்டவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த மருத்துவமனை வளாகத்தில், முழு உடல் பரிசோதனை மையம் பெயரளவிற்கு செயல்பட்டு வந்தது.
இதை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில், தனியாக ஒரு கட்டடத்தில் முழு உடல் பரிசோதனை மையம் அமைத்து, உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை, 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவமனை நிர்வாகம் சீரமைத்தது. இந்த முழு உடல் பரிசோதனை மையம் திறப்பு விழா, மருத்துவமனை முதல்வர் சிவசங்கரன் தலைமையில் நேற்று நடந்தது.
செங்கல்பட்டு தி.மு.க.., - எம்.எல்.ஏ., வரலட்சுமி பங்கேற்று, மையத்தை திறந்து வைத்தார். அப்போது, உடல் பரிசோதனை குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மருத்துவ கண்காணிப்பாளர் ஜோதிகுமார் மற்றும் அறுவை சிகிச்சை தலைவர் அரசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முழு உடல் பரிசோதனைக்கு தினமும் காலை 8:00 மணி முதல் காலை 9:00 மணி வரை பதிவு செய்ய வேண்டும்.
முழு ரத்த அணுக்கள் பரிசோதனை, ரத்த சர்க்கரை அளவு பரிசோதனை, சிறுநீரக செயல்பாடு, ரத்த கொழுப்பு, நெஞ்சு ஊடுகதிர், இதய சுருள், வயிறு ஸ்கேன், சிறுநீர், கல்லீரல் செயல்பாடு ஆகியவற்றுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.
முழு உடல் பரிசோதனை வாயிலாக, நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, தகுந்த சிகிச்சை அளிக்கலாம். அனைத்து பரிசோதனைகளையும் மிக குறைந்த கட்டணமான, 250 ரூபாயில், ஒரே இடத்தில் செய்துகொள்ளலாம். கண்டறியப்பட்ட நோய்களுக்கு சிறப்பான மேற்சிகிச்சையும் அளிக்கப்படும். இந்த பரிசோதனைக்கு வருபவர்கள் உணவு, டீ, காபி இவற்றை சாப்பிடாமல், வெறும் வயிற்றில் வர வேண்டும்.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மையம் துவக்கப்பட்டு உள்ளது, சுற்று வட்டார மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இம்மையத்தில், 250 ரூபாய் கட்டணத்தில், முழு உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. இதை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
- கோ. சிவசங்கரன்
முதல்வர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை.