மெட்ரோவில் 10.52 கோடி பேர் பயணம்
சென்னை, சென்னை விமான நிலையம், சென்ட்ரல், எழும்பூர் மற்றும் வடசென்னையை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதால், பயணியரிடம் வரவேற்பை பெற்றுள்ளது. தினமும், 3.20 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டில், இதுவரையில் இல்லாத அளவுக்கு 10.52 கோடிக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். இதற்கு முந்தைய 2023ம் ஆண்டை ஒப்பிடுகையில் 1.41 கோடி பேர் அதிகமாக பயணித்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
மெட்ரோ ரயில்களில் அதிகரித்து வரும் பயணியர் வசதிக்கு ஏற்ப, கூடுதல் ரயில்கள் இயக்குவது, நிலையங்களில் கூடுதல் நகரும்படிகள், மின்துாக்கிகள், வாகன நிறுத்த வசதி போன்ற நடவடிக்கைகளை, தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.
இதனால், பயணியர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.
கடந்த 2015, ஜூன் 29 முதல் 2024, டிச., வரை மொத்தம் 35.53 கோடி பேர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். கடந்த ஆண்டில், இதுவரையில் இல்லாத அளவுக்கு 10.52 கோடிக்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.