இடமாறுதல் ஆசிரியர்களை அதே பள்ளியில் பணியமர்த்த கோரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்
இடமாறுதல் ஆசிரியர்களை அதே பள்ளியில் பணியமர்த்த
கோரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்
தர்மபுரி, ஜன. 3-
தர்மபுரி அருகே, அரசு பள்ளியில் இருந்து இடமாறுதல் செய்த ஆசிரியர்களை, மீண்டும் அதே பள்ளியில் பணியமர்த்த கோரி, மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
தர்மபுரி மாவட்டம், சோகத்தூர் பஞ்.,க்கு உட்பட்ட ஆட்டுக்காரம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், 138 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில், 7 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில், கடந்த, 6 மாதத்திற்கு முன், பணியில் இருந்த, 4 ஆசிரியர்கள் பள்ளியில் சரிவர பணி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. 4 ஆசிரியர்களையும் வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என, பெற்றோர் சி.இ.ஓ.,விடம் கடந்த, 6 மாதங்களுக்கு முன், புகார் அளித்தனர்.
இந்நிலையில், குற்றசாட்டுக்கு உள்ளான, 4 ஆசிரியர்கள் உட்பட, 7 ஆசிரியர்களையும் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது. தகவலறிந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில், தேர்வு விடுமுறை முடிந்து நேற்று பள்ளி திறக்கப்பட்டன. மாவட்டத்தில், உள்ள பள்ளிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர். ஆனால், ஆட்டுக்காரம்பட்டி நடுநிலைப்பள்ளிக்கு மட்டும் மாணவர்கள் வரவில்லை. தகவலறிந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் தென்றல், பள்ளிக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும், பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். அதில், பெற்றோர் தரப்பில், 'புகாருக்கு உள்ளாகாத தலைமை ஆசிரியர் உட்பட இடமாறுதல் செய்த, 3 ஆசிரியர்களை மீண்டும் எங்கள் பள்ளியில் பணியமர்த்த வேண்டும். அப்படி செய்தால்தான் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம். அதுவரை மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு தொடரும்' என திட்டவட்டமாக தெரிவித்து அங்கிருந்து வெளியேறினர். மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர்.
மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பதற்காக, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.