பிரியங்க் கார்கே வீட்டை முற்றுகையிட பா.ஜ., தலைவர்கள் முயற்சி

கலபுரகி: ஒப்பந்ததாரர் சச்சின் தற்கொலைக்கு பொறுப்பு ஏற்று, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி, பிரியங்க் கார்கே வீட்டை முற்றுகையிட ஊர்வலமாக சென்ற, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக் உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பீதர் பால்கி கட்டுங்காவ் கிராமத்தைச் சேர்ந்தவர் சச்சின் மோனப்பா பஞ்சால், 26. ஒப்பந்ததாரரான இவர் கடந்த மாதம் 26ம் தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கில், மாநில கிராம பஞ்சாயத்துராஜ் அமைச்சர் பிரியங்க் கார்கே ஆதரவாளர் ராஜு கப்பனுார் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது.

இந்த விவகாரத்தில் அமைச்சர் பதவியை பிரியங்க் கார்கே ராஜினாமா செய்ய வேண்டும் என, பா.ஜ., வலியுறுத்துகிறது. ஆனால் அவர் மறுக்கிறார்.

அறிவிப்பு



இந்நிலையில் பிரியங்க் கார்கே ராஜினாமா செய்ய வலியுறுத்தி, அவரது சொந்த ஊரான கலபுரகியில் 4ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என, பா.ஜ., அறிவித்திருந்தது.

அதன்படி கலபுரகி டவுன் ஜகத் சதுக்கத்தில், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக் தலைமையில், எம்.எல்.சி.,க்கள் ரவி, ரவிகுமார் உட்பட ஆயிரக்கணக்கான பா.ஜ., தொண்டர்கள் ஒன்று கூடினர். பிரியங்க் கார்கேவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

பின், ஜகத் சதுக்கத்தில் இருந்து, பிரியங்க் கார்கே வீட்டை முற்றுகையிட, ஊர்வலமாகச் சென்றனர். ஆனால் அவர்களை பாதி வழியிலேயே, இரும்பு தடுப்பு கம்பிகள் வைத்து, போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதனால் போலீசாருக்கும், பா.ஜ., தொண்டர்களுக்கும் இடையில் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

விடுவிப்பு



இதையடுத்து அசோக், பா.ஜ., தொண்டர்களை கைது செய்து, பஸ்களில் ஏற்றி போலீசார் அழைத்துச் சென்றனர். சிறிது நேரத்தில் அனைவருக்கும் விடுவிக்கப்பட்டனர்.

போராட்டக்காரர்களுக்கு வழங்குவதற்காக பிரியங்க் கார்கேயின் வீட்டின் முன், இளநீர், தண்ணீர், காபி, டீ தயாரித்து, காங்கிரஸ் தொண்டர்கள் நையாண்டி செய்தனர்.

பா.ஜ., போராட்டம் குறித்து பிரியங்க் கார்கே அளித்த பேட்டி:

ஒப்பந்ததாரர் சச்சின் குடும்பத்தினரிடம் நான் பேசி உள்ளேன். பா.ஜ., சொல்வதற்கு எல்லாம் 'ஆமாம் சாமி' போட முடியாது.

இந்த வழக்கில் வெளிப்படைதன்மையுடன் விசாரணை நடக்க வைப்பது என் பொறுப்பு. சி.பி.ஐ., விசாரணைக்கு கொடுக்க வேண்டும் என்று, பா.ஜ.,வினர் ஏன் அழுத்தம் கொடுக்கின்றனர்?

வாய் கூசாமல்



அரசுக்கு எதிராக பேசும்படி சச்சின் குடும்பத்திற்கு, பா.ஜ., தலைவர்கள் அழுத்தம் கொடுக்கின்றனர்.

இந்த வழக்கில் அரசியல் செய்வது சரியல்ல. பா.ஜ., தலைவர்களை கொல்வதற்கு நான் கூலிப்படை ஏவியதாக வாய் கூசாமல் பொய் பேசுகின்றனர்.

நாங்கள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தினால், பா.ஜ. தலைவர்கள் வீட்டிற்குள்ளேயே அடைந்து இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

2வது நாள் விசாரணை

சச்சின் தற்கொலை குறித்து விசாரிக்கும் சி.ஐ.டி., போலீசார் நேற்று முன்தினம் பீதர் சென்றனர். சச்சின் குடும்பத்தினர், பீதர் எஸ்.பி., ரயில்வே போலீசாரிடம் தகவல் பெற்றனர். நேற்றும் 2வது நாளாக விசாரணை நடந்தது. சச்சின் தற்கொலை செய்வதற்கு முன், பாருக்கு சென்று மது அருந்தி இருந்தார். அந்த பாருக்கு சென்று விசாரணை நடத்தினர்.

Advertisement