10ம் வகுப்பு மாணவியுடன் டியூஷன் ஆசிரியர் ஓட்டம்

பெங்களூரு: பத்தாம் வகுப்பு மாணவியுடன், டியூஷன் ஆசிரியர் தலைமறைவானார். இவர்களை பற்றி தகவல் தெரிவிப்போருக்கு, 25,000 ரூபாய் வெகுமதி அளிப்பதாக போலீசார் அறிவித்துள்ளனர்.


ராம்நகர் கனகபுராவின் ஹாரோஹள்ளியின் தொட்ட சாதேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அபிஷேக், 30. இவர் பெங்களூரில் ஜிம் டிரெய்னராக பணியாற்றினார்.


ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு டியூஷன் எடுத்தார். இவரிடம் 10ம் வகுப்பு மாணவி ஒருவர், டியூஷனுக்கு வந்தார்.


கடந்த 2024 நவம்பர் 23ம் தேதி, டியூஷனுக்கு சென்ற மாணவி, மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் பீதியடைந்த பெற்றோர், பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, ஜே.பி.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.


போலீசார் விசாரணை நடத்தியபோது, மாணவியை, டியூஷன் ஆசிரியர் அபிஷேக் காதலிப்பதாகக் கூறி, கடத்திச் சென்றிருப்பது தெரிந்தது. அவரை தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் எந்த தடயமும் கிடைக்கவில்லை. அவர் போன் பே, கூகுள் பே, பே.டி.எம்., என, ஆன்லைன் வழியாக பணப்பரிமாற்றம் செய்யாததால், அவரை கண்டுபிடிப்பது போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது.


மகளை கண்டுபிடித்துத் தரும்படி, பெற்றோர் மன்றாடுகின்றனர். எனவே அபிஷேக் குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு, 25,000 ரூபாய் வெகுமதி வழங்குவதாக, ஜே.பி. நகர் போலீசார் அறிவித்துள்ளனர்.

Advertisement