பெங்களூரு, மக்களை வாட்டும் குளிர்
பெங்களூரு : பெங்களூரு மக்களை குளிர் வாட்டி வதைக்கிறது. ஸ்வெட்டர், குல்லா அணிந்து தான் வெளியே செல்கின்றனர். தீ முட்டி குளிர்காய்கின்றனர்.
கர்நாடக தலைநகரான பெங்களூருவுக்கு 'குளுகுளுப்பு நகரம்' என்ற பெயரும் உண்டு. ஆனால் பல பணிகளுக்காக மரங்கள் வெட்டப்பட்டதால், சில ஆண்டுகளாக குளுகுளு தன்மையை பெங்களூரு இழந்தது.
ஒரு காலத்தில் டிசம்பர் - ஜனவரி மாதத்தில் இருக்கும் பெங்களூருக்கும், தற்போதைக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது என்று மக்கள் பேசி வந்தனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு கடந்த மாதத்தில் இருந்து, நகரில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. குறிப்பாக அதிகாலை நேரத்தில் பனிமூட்டமாக உள்ளது. காலை 7:00 ஆனாலும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி செல்கின்றனர்.
தற்போது அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஷியாகவும், குறைந்தபட்சம் 14 டிகிரி செல்ஷியசாகவும் உள்ளது.
அதிகாலையில் நடைப்பயிற்சி செல்வோர் ஸ்வெட்டர், குல்லா அணிந்து செல்கின்றனர். பல இடங்களில் தீ முட்டி குளிர்காய்கின்றனர்.