ஸ்ரீராமபுரம் திருவள்ளுவர் சங்க புதிய தலைவராக எஸ்.டி. குமார்

ஸ்ரீராமபுரம்: பெங்களூரு ஸ்ரீராமபுரத்தில் உள்ள திருவள்ளுவர் சங்க புதிய தலைவராக, தாய்மொழி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.குமார் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

பெங்களூரு ஸ்ரீராமபுரத்தில் திருவள்ளுவர் சங்கம் அமைந்துள்ளது. இச்சங்கத்தின் புதிய தலைவர் தேர்ந்தெடுத்தல் மற்றும் மறைந்த முன்னாள் தலைவர்கள் வேணுகோபால், கி.சு. இளங்கோவன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. புதிய தலைவராக தாய்மொழி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின், அவர் பேசியதாவது:

மிகவும் பழமை வாய்ந்த பெங்களூரு திருவள்ளுவர் சங்கத்திற்கு என்னை ஒருமனதாக தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு, சங்க நிர்வாகிகளுக்கு நன்றி. என்னுடைய முதல் பயணமாக பெங்களூரு ஹலசூரு ஏரிக்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு, திருவள்ளுவர் தினத்தை ஒட்டி சங்கம் சார்பில் மாலை அணிவிக்கப்படும்.

சங்கம் சார்பில் நடக்கும் திருவள்ளுவர் தின விழாவில், அனைத்து தமிழ் அமைப்புகளும் கலந்து கொண்டு, திருவள்ளுவருக்கு சிறப்பு செய்ய வேண்டும். கட்சி, ஜாதி, மதம் என்று பாராமல் அனைவரும் தமிழராக ஒன்று கூட வேண்டும். எந்த கட்சிக் கொடியோ, அரசியல் தலைவர்கள் படங்கள் பயன்படுத்தாமல், திருவள்ளுவருக்கு மட்டுமே சிறப்பு செய்வோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

சங்க செயலர் பிரபாகரன், துணை தலைவர் ரங்கநாதன், பொருளாளர் ஜெயவேலு, கர்நாடக மாநில தி.மு.க., அமைப்பாளர் ராமசாமி, எம்.ஜி.ஆர்., மன்ற முன்னாள் செயலர் சடகோபன் உட்பட செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement