கர்நாடகா டூ காஷ்மீர் பைக்கில் பறந்த இளம்பெண்

பைக் அல்லது காரில் தேசிய நெடுஞ்சாலையில் 'லாங் டிரைவ்' செல்வது யாருக்கு தான் பிடிக்காது. பெரும்பாலும் இளைஞர்கள் தான், தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து லாங் டிரைவ் செல்வதற்கு அதிகம் ஆசைப்படுவர்.

ஆனால், இன்றைய காலத்தில் இளைஞர்களுக்கு நிகராக இளம் பெண்களும் லாங் டிரைவ் செல்கின்றனர். விலை உயர்ந்த, அதிக எடை கொண்ட பைக்குகளை கூட சர்வசாதாரணமாக ஓட்டி செல்கின்றனர். இவர்களில் ஒருவரை பற்றி பார்க்கலாம்.

ஆர்வம்



தார்வாட் டவுனை சேர்ந்தவர் ஹரவிஷெட்டர். இவரது மகள் பிரதிக் ஷா, 19. சிறு வயதில் இருந்தே, இவருக்கு பைக் ஓட்டுவதில் ஆர்வம் அதிகம். தந்தை பைக்கில் எங்காவது வெளியே சென்றால், முதல் ஆளாக சென்று பைக்கில் ஏறி கொள்வார். தனது 12 வயதில் தந்தையின் உதவியுடன் முதல் முறையாக கியர் பைக் ஓட்டினார்.

இவரது ஆர்வத்தை பார்த்து, 18 வயதில் கே.டி.எம்., டியூக் 390 மாடல் பைக்கை தந்தை வாங்கி கொடுத்தார். முன்னதாக ஓட்டுனர் உரிமமும் வாங்கினார். பைக்கில் லாங் டிரைவ் செல்ல வேண்டும் என்ற தன் விருப்பத்தை பெற்றோரிடம் கூறினார். லாங் டிரைவ் செல்ல பிரதிக் ஷா தேர்வு செய்தது காஷ்மீரின் ஸ்ரீநகர். முதலில் பெற்றோர் தயக்கம் காட்டினர். இதற்கு காரணம் தார்வாடில் இருந்து ஸ்ரீநகர் 2,690 கி.மீ., துாரம்.

புதிய அனுபவம்



ஆனால், பெற்றோரிடம் தனது ஆசையை எடுத்துக் கூறி சம்மதம் பெற்றார். கடந்த ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி தார்வாடில் இருந்து பைக்கில் புறப்பட்ட அவர் லோனாவாலா, வதோரா, ஜோத்பூர், அமிர்தசரஸ் வழியாக ஸ்ரீநகரை பிப்ரவரி 17 ம் தேதி சென்று அடைந்தார்.

ஸ்ரீநகரில் பல இடங்களை பைக்கிலேயே சுற்றி பார்த்துவிட்டு கன்னட கொடியுடன் பைக்கில் வலம் வந்தார். பிப்ரவரி 18ம் தேதி ஸ்ரீநகரில் இருந்து புறப்பட்டு 21ம் தேதி தார்வாடை வந்தடைந்தார். அப்போது அவரது வயது, 18 ஆண்டுகள் 11 மாதம். மொத்தம் 5,380 கி.மீ., சென்று வந்து உலக சாதனை - 2024 புத்தகத்திலும், ஆசியா புக்ஸ் ஆப் ரிக்கார்ட் புத்தகத்திலும் இடம் பிடித்தார்.

இந்த பயணம் குறித்து பிரதிக் ஷா கூறுகையில், ''தார்வாடில் இருந்து ஸ்ரீநகருக்கு தனியாக பைக்கில் சென்றது புதிய அனுபவம். அங்கு சென்றபோது என்னைப் போன்று பைக்கில் வந்த நிறைய பெண்களை பார்த்தேன். அவர்கள் வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள். அவர்களிடம் பழகும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது.


''ஒரு நாளைக்கு 500 கி.மீ., துாரம் பைக் ஓட்டினேன். நிறைய இடத்தில் எனக்கு தங்கும் வசதி கிடைத்தது. இந்தப் பயணத்தில் நிறைய நல்லவர்களை சந்தித்துள்ளேன். என் பயணத்தை தொடருவேன்,'' என்றார்

-- நமது நிருபர் - -.

Advertisement