கர்நாடகாவில் நடுங்கும் குளிர் மேலும் அதிகரிக்க வாய்ப்பு
பெங்களூரு: கர்நாடகாவின் பெரும்பாலான மாவட்டங்களில், குளிரின் தாக்கம் அதிகரிக்கிறது. பெங்களூரில் 10 ஆண்டுகளுக்கு பின், முதன் முறையாக கூடுதல் குளிர்ச்சி நிலவுகிறது.
இது குறித்து, வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:
கர்நாடகாவின் பல மாவட்டங்களில், குளிரின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. வெப்ப நிலை குறைந்துள்ளது. குறிப்பாக பீதர், கலபுரகி, விஜயபுரா மாவட்டங்களில், கடுமையான குளிர்க்காற்று வீசுகிறது. கலபுரகி, விஜயபுராவில் வெப்பநிலை வழக்கத்தை விட, நான்கு டிகிரி செல்சியஸ் குறைந்துள்ளது.
விஜயபுராவில் நேற்று முன் தினம், 9 டிகிரி செல்சியஸ், ஹாசனில் 10.3, சிந்தாமணியில் 10.4, ராய்ச்சூரில் 12 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி உள்ளது. பெங்களூரில் குறைந்தபட்ச வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸ் பதிவாகிறது. இது வழக்கத்தை விட 1.4 டிகிரி செல்சியஸ் குறைவாகும்.
கர்நாடகாவின் பீதர், கலபுரகி, விஜயபுரா மாவட்டங்களில், அடுத்த இரண்டு, மூன்று நாட்கள் அதிகமான குளிர் இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை மேலும் குறையும். மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பெங்களூரில் 10 ஆண்டுகளுக்கு பின், முதன் முறையாக கடும் குளிர் காற்று வீசுகிறது. அதிகாலை குளிரின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. அடுத்த வாரம் வரை இதே நிலை நீடிக்கும். வட மாநிலங்களில் வீசும் குளிர் காற்றின் தாக்கத்தால், பெங்களூரில் வெப்பநிலை கணிசமாக குறைகிறது.
வரும் நாட்களில் வெப்ப நிலை 10 முதல் 12 டிகிரி செல்சியஸாக குறையும். கடுங்குளிரை எதிர்கொள்ள மக்கள் தயாராக வேண்டும். கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால், கர்நாடகாவில் குளிர் அதிகம் இருக்கும். அதிகமான மழை பெய்ததால், ஏரி, அணைகள், ஆறுகள் நிரம்பின. மரம், செடி, கொடிகள் பசுமையாக மாறியுள்ளன. இதுவும் குளிர் அதிகரிக்க முக்கிய காரணமாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.