சமுதாயத்தையே தலை நிமிர செய்த பிஎச்.டி., பெண்

2

பனியர்' என்ற பழங்குடியின சமுதாயத்தினர், கர்நாடகா, தமிழகம், கேரளா மலை பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர். கர்நாடகாவில் இச்சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மொத்தமே 495 பேர் மட்டும் தான். இவர்கள், கூலி தொழிலாளியாக மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.

இவர்களில் மைசூரு மாவட்டம், எச்.டி.கோட்டேயில் இருந்து 6 கி.மீ., தொலைவில் உள்ள செபினகோலி ஹட்டியை சேர்ந்தவர் திவ்யா, 29. இவரே, இச்சமுதாயத்தின் பிஎச்.டி., பெற்ற முதல் பெண்.

கால் வயிறு



இது குறித்து அவர் கூறியதாவது:

நானும், எனது சகோதரரும் பள்ளிக்கு நடந்தே செல்வோம். வனப்பகுதி நிறைந்திருப்பதால், புலி, யானைகள் மற்றும் பிற விலங்குகளும் இருக்கும். எனது தந்தை பணிக்கு செல்லும் போது என்னையும், என் சகோதரனையும் பள்ளியில் விட்டு செல்வார். மாலையில் பள்ளி முடிந்ததும் எங்கள் தாய் அல்லது பாட்டி வந்து அழைத்து செல்வார்.

எங்கள் பள்ளிக்கு அடுத்துள்ள அங்கன்வாடி மையத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படும் போது, எங்களுக்கும் உணவு கிடைக்கும் என எதிர்பார்த்தோம்; ஆனால், ஏமாற்றம் தான் மிச்சம். ஒருநாள் எங்களை அழைத்து, சிறிதளவு உணவு வழங்கினர். அங்கன்வாடியால், எங்களின் கால் வயிறு நிரம்பியது.

எங்கள் சமூகத்தினர், உணவுக்காக போராடுவதே வாடிக்கை. அப்படி இருக்கும் போது, படிப்பு பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. ஆனால், எனக்கோ, படிக்க வேண்டும் என ஆசை. ஏழாம் வகுப்பில் படித்து கொண்டிருக்கும் போது, புத்தகம் வாங்க பணம் இல்லை; வீட்டில் இருந்தோர், 'படித்தது போதும், வீட்டில் இரு' என்றனர். நீண்ட நாட்கள் பள்ளிக்கு செல்லவில்லை. என் மீதான அன்பால், எங்கள் வீட்டில் இருந்த ஆட்டை விற்று படிக்க வைத்தனர்.

பல நாள் பட்டினி



ஆண்டின் பல நாட்கள் பட்டினி தான். சில சமயம் கொஞ்ச உணவு; சில வேளை வனப்பகுதியில் கிடைக்கும் கிழங்கை அவித்து சாப்பிடுவோம்; சில நாட்கள் வயிற்றில் ஈரத்துணியை கட்டிக் கொண்டு இருப்போம்.

எங்கள் சமூகத்திற்கான மிகப்பெரிய சாபக்கேடு, குடிப்பழக்கம். எனது தந்தை குடிக்கு அடிமையானவர். கூலி வேலையில் கிடைக்கும் பணத்தில் குடித்து விட்டு தான் வீட்டுக்கு வருவார். அதன் பின் ஒரே ரகளை தான். அடி விழும் என்ற பயத்தில் நாங்கள் ஒளிந்து கொள்வோம். பல நாட்கள், எங்கள் குடிசையை பிய்த்து எறிவார். இதனால் குடிப்பவர்களை பார்த்தால், அதிக கோபம் வரும்.

ஒரு நாள் குடித்து விட்டு, தள்ளாடினார். இதை பார்த்த என் சகோதரி, அடுப்பில் இருந்த கரியை எடுத்து, 'குடித்துள்ளீர்களா' என கேட்டு சுவற்றில் எழுதினார். இதை பார்த்த எனக்கு தைரியம் வந்தது. 'நீங்கள் குடிப்பதால் அனைவரும் எங்களை குடிகாரனின் பிள்ளைகள்' என்கின்றனர் என்றேன்.

மாறிய தந்தை



என்ன நினைத்தாரோ, அன்று முதல் குடிப்பதையும், புகைப்பதையும் விட்டு விட்டு, எங்கள் மீது கவனம் செலுத்தினார். நான், பி.எட்., படிப்பில் முதல் ரேங்க் எடுத்தேன். எனது தந்தைக்கு, சமூக நலத்துறை அதிகாரியின் அறிமுகம் கிடைத்தது. அவரிடம், என்னை பற்றி கூறினார். அந்த அதிகாரியும், அனிமாலா என்ற இடத்தில் உள்ள பட்டியல் சமுதாய குழந்தைகள் அதிகம் படிக்கும் 'ஹடியா ஜூனியர் துவக்க பள்ளி'யில் மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்க அனுமதித்தார்.

அப்பகுதி குழந்தைகள், மிகவும் வறுமையில் இருந்தனர். எனவே, தினமும் பள்ளிக்கு செல்லும் போது, அவர்களின் வீட்டிற்கு சென்று, அவர்களை தயார் செய்து அழைத்து செல்வேன். அவர்களுக்கு இயற்கை குறித்து கற்பிக்க துவங்கினேன். இதன் மூலம் ஆறு மாதங்களில் 15 குழந்தைகளை பள்ளியில் சேர்த்தேன்.

பாராட்டு



என் பணியை பாராட்டிய அதிகாரி, என்னை டி.கே.குப்பேயில் உள்ள ஆசிரம பள்ளியில் சேர்த்தார். அங்குள்ள ஆசிரியர்களுக்கு 'பட்டியல் சமுதாய' குழந்தைகளின் மொழி புரியவில்லை. எனக்கு அது இயல்பாகவே இருந்ததால், சில நாட்களில் குழந்தைகள் பாசம் காட்டினர்.

இப்பள்ளியில் படித்த 50 முதல் 60 குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்திய தகவல் தெரிந்தது. இதனால், அவர்களின் வீட்டுக்கு சென்று, படிப்பின் முக்கியத்தை விளக்கி பள்ளிக்கு அழைத்து வந்தேன். சில நாட்களில், எனக்காக அவர்கள் வீட்டு வாசலில் காத்திருந்தனர். இது எனக்கு பெரிய மகிழ்ச்சி.

ஹம்பி கன்னட பல்கலைக்கழகத்தில், 2017 ல் எம்.ஏ., - பிஎச்.டி., படித்தேன். சமூகவியலில் எம்.ஏ., செய்த பழங்குடியினர் ஆய்வுகள் பேராசிரியர் மைத்ரியின் வழிகாட்டுதலின் கீழ், 'பனியர் பழங்குடியினரின்' சமூக ஆய்வுகள் என்ற பாடத்தில் பிஎச்.டி., செய்தேன். அப்போது, மாத ஊக்கத்தொகையாக வர வேண்டிய 10,000 ரூபாய், மூன்று ஆண்டுகளாக வரவே இல்லை.

ஆனால், பல்கலை மாணவர்கள் போராட்டத்தால், நிலுவை தொகை கிடைத்தது. இதனால், பிஎச்.டி., படிப்பை நிறைவு செய்தேன். இதன் மூலம் பனியர் சமுதாயத்தில் பிஎச்.டி., முடித்த முதல பெண் என்ற பெருமைக்கு ஆனேன். தற்போது, ராய்ச்சூர் பல்கலை கழகத்தில் சமூகவியல் துறையில் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி வருகிறேன்.

பழங்குடியின குழந்தைகளின் வலி என்ன என்பது எனக்கு தெரியும். எனவே தான், அவர்களுக்கு உதவியாக இருக்கிறேன். குடகுவில் சந்தனகெரே ஹடியில் உள்ள ஏழு மாணவர்கள் பி.ஏ., படிக்கின்றனர். இதில் ஒருவர் டி.லிட்., முடித்து, ஆசிரியராக உள்ளார்.

'முன் வைத்த காலை பின் வைக்காதே. உங்கள் இலக்கை எட்ட வேண்டுமென்றால், உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்' என்று அவர்களுக்கு எப்போதும் கூறுவேன்.

எனக்கு கல்வி இல்லை என்றால், ஒரு இருட்டு அறையில் இருந்திருப்பேன். கல்வி எனக்கு ஞானத்தையும், விடுதலையையும், உலகை அறியும் ஆற்றலையும், சுதந்திரமாக வாழும் தன்னம்பிக்கையையும் அளித்துள்ளது.


இவ்வாறு அவர் கூறினார்

- நமது நிருபர் -.

Advertisement