மெட்ரோ கட்டணம் உயர்வு? அதிகாரிகள் ஆலோசனை!

பெங்களூரு: பஸ் டிக்கெட் கட்டணத்தை தொடர்ந்து, மெட்ரோ ரயில் பயண கட்டணத்தை அதிகரிக்க, பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனம் தயாராகிறது.

கர்நாடகாவின் கே.எஸ்.ஆர்.டி.சி., ---- பி.எம்.டி.சி., வடமேற்கு, கல்யாண கர்நாடகா என, நான்கு போக்குவரத்து கழகங்களின், பஸ் டிக்கெட் கட்டணம் 15 சதவீதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. கட்டண உயர்வை எதிர்க்கட்சிகள் உட்பட, பலரும் கண்டித்துள்ளனர்.

இதற்கிடையே மெட்ரோ ரயில் கட்டணத்தை உயர்த்த, பெங்களூரு மெட்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மெட்ரோ நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணம் கடந்த 2017 ஜூன் 18ம் தேதி, 10 முதல் 15 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. தற்போது பெங்களூரில் 76.95 கி.மீ., துாரம் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ஏழு ஆண்டுகளாக பயண கட்டணம் உயர்த்தப்படவில்லை. எனவே கட்டணத்தை உயர்த்த தயாராகிறோம்.

குழு அமைப்பு



டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தாரணி, கர்நாடக உள்துறை, நகர விவகாரங்கள் துறை அதிகாரி சத்யேந்திரபால் சிங், ஓய்வு பெற்ற கூடுதல் தலைமை செயலர் ரமண ரெட்டி ஆகியோர் அடங்கிய குழுவை, பெங்களூரு மெட்ரோ நிறுவனம் அமைத்துள்ளது.

இக்குழுவினர் சிங்கப்பூர், ஹாங்காங், டில்லிக்கு சென்று அங்குள்ள மெட்ரோ ரயில் கட்டண உயர்வு குறித்து, ஆய்வு செய்துள்ளனர். சிங்கப்பூரில் மெட்ரோ ரயில் நிறுவனம், அரசு சார்ந்தது என்றாலும் அதனை தனியார் நிர்வகிக்கின்றனர். ஆண்டு தோறும் கட்டண உயர்வு நடைமுறையை பின்பற்றுகின்றனர். ஆனால் இதை பின்பற்றுவது கஷ்டம். டில்லியில் பின்பற்றப்படும் நடைமுறையை, பெங்களூரில் பின்பற்றலாம்.

தற்போது பெங்களூரில் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, மற்றொரு நிலையத்துக்கு குறைந்தபட்சம் 10 ரூபாய்; அதிகபட்சம் 60 ரூபாய் வரை உள்ளது. ஸ்மார்ட் கார்டுகள், கியுஆர் கோட் டிக்கெட் பயன்படுத்தும் பயணியருக்கு 5 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது.

விஸ்தரிப்பு



மெட்ரோ ரயில் பாதையை, 220 கி.மீ., ஆக விஸ்தரிக்க திட்டம் தயாராகியுள்ளது. பணிகளும் நடக்கின்றன. மெட்ரோ திட்டங்களுக்காக, பல்வேறு வங்கிகள், ஏஜென்சிகளில் வாங்கிய கடனுக்கு, வட்டி கட்ட வேண்டும். ரயில்களின் நிர்வகிப்பு, ஊழியர்களின் ஊதியம் என, ஆண்டுதோறும் செலவு அதிகரிக்கிறது. எனவே 15 முதல் 20 சதவீதம் உயர்த்த வேண்டியது கட்டாயம்.

மெட்ரோ டிக்கெட் கட்டண உயர்வு குறித்து, இம்மாதம் 17ம் தேதி ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளது. இதில் எவ்வளவு உயர்த்துவது என்பது குறித்து முடிவாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement