அங்கீகாரமற்ற விடுதியில் தங்க வேண்டாம் லாட்ஜ் உரிமையாளர் சங்கம் வலியுறுத்தல்

ராமேஸ்வரம்: -ராமேஸ்வரத்தில் அரசு அனுமதியின்றி செயல்படும் விடுதிகள், குளியல் அறைகளுக்கு பக்தர்கள் செல்ல வேண்டாம் என லாட்ஜ் உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

டிச.23ல் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை அருகில் தனியாருக்கு சொந்தமான பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்திய இருவரை போலீசார் கைது செய்து இந்த அறையை பூட்டி சீல் வைத்தனர். இச்சம்பவம் புனித நகருக்கும் களங்கம் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அரசு அனுமதி இல்லாத விடுதிகள், விடுதியாக மாற்றிய வீடுகளில் ரகசிய கேமரா பொருத்தி உள்ளனரா என பக்தர்களிடம் அச்சம் ஏற்பட்டது.

இதனை போலீசார் கண்காணித்து பக்தர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

ராமேஸ்வரம் லாட்ஜ் உரிமையாளர் சங்க செயலாளர் ஏ.நாகராஜ் கூறியதாவது: அரசு அங்கீகாரமின்றி இயங்கும் விடுதிகள், குளியல் அறைகள், உடைமாற்றும் அறைகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் கண்டு கொள்ளவில்லை. இதனால் தற்போது சமூக விரோத செயல்கள் நடந்து பக்தர்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படாத வகையில் போலீசார், தாசில்தார், நகராட்சி கமிஷனர் கண்காணித்து தடுக்க வேண்டும். மேலும் அரசு அங்கீகாரம் இல்லாத விடுதிகள், உடைமாற்றும் அறைக்கு பக்தர்கள் செல்ல வேண்டாம் என்றார்.

Advertisement