ரெகுநாதபுரம்: பிளாஸ்டிக் துகளை பயன்படுத்தி தார் ரோடு அமைப்பு

ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் ஊராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்டும், அதற்கான உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

2023ல் ரூ. 10 லட்சத்திற்கு வாங்கப்பட்ட அரவை இயந்திரங்கள் மூலம் பிளாஸ்டிக் பை, மக்காத பிளாஸ்டிக் கவர்களை துாய்மை செய்தும் மற்றொரு மிஷின் மூலமாக அரைத்தும் பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது ரெகுநாதபுரம் ஊராட்சியில் கிருஷ்ணர் கோயில் செல்லும் வழியில் ஒரு கி.மீ.,க்கு தார் சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இந்த பணிக்கு பிளாஸ்டிக் துகள்களை பயன்படுத்துகின்றனர்.

ரெகுநாதபுரம் ஊராட்சி தலைவர் கோபாலகிருஷ்ணன் துணைத் தலைவர் ஜெகத்ரட்சகன் மற்றும் யூனியன் பொறியாளர் பாலமுருகன் ஆகியோர் கூறியதாவது:

ஊராட்சியில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவு பொருட்களை உரிய முறையில் துாளாக அரைத்து சாக்கு மூடைகளில் கட்டி வைக்கப்பட்டுள்ளது. தற்போது ரோடு அமைப்பதற்காக தார் கலவை இயந்திரத்தில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு அவற்றுடன் உரிய அளவில் பிளாஸ்டிக் துகள்கள் சேர்ந்து உருக்கப்படுகிறது.

இதனால் தார் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் ஒன்றாக கலந்து சாலை அமைப்பதற்கு ஏதுவாக அமைகிறது. இவற்றை பயன்படுத்துவதால் தார் ரோடு பல ஆண்டுகளுக்கு சேதமடையாமல் தரம் குன்றாமல் இருக்கும். இதன் மூலம் பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சி மூலம் பயன்பாட்டிற்கு வந்த முதல் ஊராட்சியாகவும் ரெகுநாதபுரம் திகழ்கிறது என்றனர்.

Advertisement