மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் மறியல்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவம் தவறிய மழை, நோய் தாக்கிய நெல், மிளகாய் விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம், காப்பீட்டுத்தொகை வழங்க வலியுறுத்தி ராமேஸ்வரம் ரோட்டில் நுாற்றுகணக்கான விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கத்துடன் இணைந்து திருவாடானை, கடலாடி, கமுதி, முதுகுளத்துார், சிக்கல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சங்க மாநில தலைவர் பாக்கியநாதன் தலைமை வகித்தார். பருவம் தவறிய மழை மற்றும் நோய் தாக்கிய நெற்பயிருக்கு நிவாரணத்தொகையாக ஏக்கருக்கு ரூ.25ஆயிரம், மிளகாய்க்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு தேசிய காப்பீட்டு திட்டத்தில் 100 சதவீதம் இழப்பீடு தர வேண்டும்.
2023-24 ல் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் அழிவுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். கூட்டுறவு பயிர்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பேச்சுவார்த்தை வரவேண்டும் என்றனர். அவர் ராமேஸ்வரத்தில் நிகழ்ச்சியில் உள்ளதால் வர நேரமாகும் என போலீசார் கூறினர்.
இந்நிலையில் ராமேஸ்வரம் ரோட்டில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் வேளாண் இணை இயக்குநர் மோகன் ராஜ், தாசில்தார் சுவாமிநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாஸ்கர மணியன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். நிவாரணத்தொகை வழங்குவது தொடர்பாக கலெக்டர் உறுதியளிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
இதையடுத்து முக்கிய நிர்வாகிகள் மட்டும் கலெக்டரை சந்தித்து பேசினர். நிலுவை நிவாரணத்தொகை, தற்போதைய பயிர்சேதம் ஆகியவற்றிற்கு விரைவில் நிவாரணத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கூறினார்.
இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக கலெக்டர் அலுவலகம் அருகே ராமேஸ்வரம் ரோட்டில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.