முன்னாள் ராணுவ வீரர் கரடி தாக்கியதில் சாவு

கடமலைக்குண்டு: தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே துரைசாமிபுரத்தை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் சென்றாயப்பெருமாள், 65. இவருக்கு சொந்தமான தோட்டம் குமணந்தொழு சிதம்பரம் விலக்கு அருகே மலையடிவாரத்தில் உள்ளது. இவர், தன் மனைவி சரஸ்வதியிடம், தோட்டத்திற்கு செல்வதாக கூறி, டூ - வீலரில் நேற்று முன்தினம் இரவு சென்றார்; நேற்று காலை வரை வீடு திரும்பவில்லை. மொபைல் போன் அழைப்பையும் ஏற்கவில்லை.

மனைவி, தோட்டத்தின் மேற்கு பக்கம் உள்ள 'கேட்' வழியாக சென்று பார்த்தார். அங்கு, கரடியால் தாக்கப்பட்டு சென்றாயப்பெருமாள் தலை, முகத்தில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். முன்னதாக, அவர் உயிர் தப்ப கரடியுடன் போராடிய தடயங்கள் இருந்தன. கடமலைக்குண்டு இன்ஸ்பெக்டர் கண்மணி, மயிலாடும்பாறை எஸ்.ஐ., ராமசாமி விசாரித்தனர். கரடிகள் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement