அரசு பஸ் கதவு மூடாததால் சாலையில் விழுந்த பெண் பலி
திருச்சி: திருச்சி, புத்துார் பகுதியைச் சேர்ந்தவர் ஜாபர் நிஷா, 55. இவர், உறவினருடன் மேட்டுப்பாளையம் செல்ல, நேற்று காலை, திருச்சி மத்திய பஸ் ஸ்டாண்டில் அரசு பஸ்சில் ஏறி, முன்பக்க படிக்கட்டுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தார்.
பஸ், எம்.ஜி.ஆர்., சிலை ரவுண்டானாவை சுற்றி, வளைவில் திரும்பிய போது, இருக்கையில் இருந்து எழுந்த ஜாபர் நிஷா, வேறு இருக்கைக்கு மாற முயன்றார். அப்போது, அவர் தடுமாறி விழுந்தார்.
பஸ்சின் முன்பக்க படிக்கட்டு கதவு திறந்திருந்ததால், அதன் வழியாக, சாலையில் தவறி விழுந்த அவர், தலையில் படுகாயமடைந்து இறந்தார். இச்சம்பவம் குறித்து, கன்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
பயணியர் பாதுகாப்பிற்காக அரசு பஸ்களில் கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன. பஸ் இயக்கத்தில் இருக்கும் போது, கதவு மூடப்பட வேண்டும். ஆனால் நேற்று, கோவை வழியாக மேட்டுப்பாளையம் சென்ற பஸ்சில் கதவுகளை அடைக்கவில்லை. இதுவே உயிரிழப்புக்கு காரணம்.