'மொற்பர்த்' பண்டிகை தோடர் பழங்குடியினர் உற்சாகம்
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் தோடரின மக்களின் பாரம்பரிய பண்டிகையான, 'மொற்பர்த்' பண்டிகை ஆண்டுதோறும், டிச., இறுதியில் அல்லது ஜன., முதல் வாரத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். மாவட்டத்தில் உள்ள அனைத்து தோடரின மக்கள் பங்கேற்பர்.
நடப்பாண்டின் பண்டிகை தோடர் கிராமம் எனப்படும் மந்துகளின் தலைமையிடமான, தலைக்குந்தா அருகே உள்ள முத்தநாடு மந்தில் நேற்று காலை நடந்தது. பெரும்பாலான தோடரின மக்கள் பங்கேற்று, பழமை வாய்ந்த கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
தோடரின ஆண்கள் மட்டும் தங்கள் பாரம்பரிய உடை அணிந்து மண்டியிட்டு வழிபாடு நடத்தினர். பின், கோவிலை சுற்றி தங்கள் பாரம்பரிய நடனத்தை ஆடி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர். தோடர் இளைஞர்கள், இளவட்ட கல்லை துாக்கி தங்களின் வலிமையை நிரூபித்தனர்.
விழாவில் பங்கேற்றவர்களுக்கு, பால், நெய் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பிரத்யேக பிரசாதம் வழங்கப்பட்டது. உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணியர் பங்கேற்றனர்.