கணவருடன் எஸ்.ஐ., பலி மணமான 2 மாதத்தில் சோகம்
சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த அக்கறை ஜெயங்கொண்டபட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் கலைவேந்தன், 36; பரங்கிப்பேட்டை தனியார் அனல் மின் நிலைய பணியாளர்.
அதே பகுதியைச் சேர்ந்தவர் இளவரசி, 30; குமராட்சி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ.,யாக இருந்தார். உறவினர்களான இருவரும் ஐந்து ஆண்டுகளாக காதலித்து, இரு வீட்டார் சம்மதத்துடன், கடந்த நவ., 14ல் திருமணம் செய்து கொண்டனர்.
புதுமண தம்பதியினர், நேற்று காலை, 11:20 மணிக்கு வீரன்கோவில் திட்டில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்காக பைக்கில், சித்தலப்பாடி அருகே சென்றபோது, எதிரே சிதம்பரம் நோக்கி வந்த அரசு பஸ், இவர்கள் சென்ற பைக் மீது மோதியது.
அதில், பஸ்சின் அடிப்பகுதியில் சிக்கி, 20 மீட்டர் துாரம், பைக் இழுத்துச் செல்லப்பட்டது. பஸ்சை ஓட்டி வந்த தற்காலிக டிரைவரான சபரிராஜா, 24, கண்டக்டர் முத்துராமன் பஸ்சை நிறுத்திவிட்டு தப்பினர்.
பஸ் பயணியர், பஸ்சின் அடியில் பைக்குடன் சிக்கிய தம்பதியை மீட்டனர். ஆனால், இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். டி.எஸ்.பி., லாமேக் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.
அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து, தப்பியோடிய பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.