சாய்ந்து விழும் நிலையில் உள்ளதாலுகா அலுவலக காம்பவுண்ட் சுவர் விபத்திற்கு முன் சீரமைக்கலாமே...
பரமக்குடி: பரமக்குடி தாலுகா அலுவலக காம்பவுண்ட் சுவர் ஒட்டுமொத்தமாக சாய்ந்து வரும் நிலையில் விபத்தை ஏற்படுத்தும் முன் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரமக்குடி-இளையான்குடி ரோட்டில் தாலுகா அலுவலகம் செயல்படுகிறது. இங்கு தாலுகா அலுவலகம் உட்பட மாற்று திறனாளிகள் அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம், கருவூலம், சர்வேயர் அலுவலங்கள் உள்ளது.
மேலும் பெண்கள் சிறைச்சாலை, இ--சேவை மையம், வி.ஏ.ஓ., அலுவலகம் உட்பட பொதுமக்கள் வந்து செல்லும் அத்தியாவசிய இடமாக இருக்கிறது. தொடர்ந்து இளையான்குடி ரோடு பகுதியில் அமைக்கப்பட்ட காம்பவுண்ட் சுவர் சாய்ந்து வருகிறது. முக்கியமாக தாசில்தார் குடியிருப்பு வளாகம் அருகில் ஒட்டுமொத்த சுவரும் சாய்ந்த நிலையில், வாறுகால் பகுதியில் அரிப்பு உண்டாகி விபத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.
இதன் அருகில் ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளதுடன் பஸ் ஸ்டாப் செயல்படுகிறது.
இப்பகுதியில் பள்ளி மாணவர்கள் உட்பட பொதுமக்கள் நாள் முழுவதும் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. சுவர் சாய்ந்து விபத்தை ஏற்படுத்தும் முன் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.