தற்காலிக டிரைவர் ஓட்டிய அரசு பஸ் மோதி விபத்து; பெண் எஸ்.ஐ., கணவருடன் பரிதாப பலி சிதம்பரம் அருகே திருமணமான 2 மாதத்தில் சோகம்:
சிதம்பரம்: சிதம்பரம் அருகே தற்காலிக டிரைவர் ஓட்டிய அரசு பஸ் மோதியதில், பைக்கில் சென்ற பெண் சப் இன்ஸ்பெக்டர், கணவருடன் உடல் நசுங்கி இறந்தார். திருமணமான இரு மாதத்தில் நடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் அடுத்த அக்கறை ஜெயங்கொண்ட பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் கலைவேந்தன்,36; பரங்கிப்பேட்டை தனியார் அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
அதே கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்கொடி மகள் இளவரசி, 30; குமராட்சி போலீஸ் ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார்.
உறவினர்களான இருவரும், கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன், கடந்த நவம்பர் 14 ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
புதுமண தம்பதியான கலைவேந்தன், இளவரசி நேற்று காலை 11:20 மணிக்கு வீரன்கோவில் திட்டில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு பைக்கில் சென்றனர். சித்தலப்பாடி அருகே சென்றபோது, எதிரே சிதம்பரம் நோக்கி வந்த டி.என்32-என்3399 பதிவெண் கொண்ட அரசு பஸ், பைக் மீது மோதியது.
அதில் பைக், பஸ்சின் முன்பக்க அடிப்பகுதியில் சிக்கி 20 மீட்டர் துாரம் இழுத்து சென்றது. விபத்தை அறிந்த பஸ்சை ஓட்டி வந்த தற்காலிக டிரைவரான துணிசரமேடு கிராமத்தை சேர்ந்த சபரிராஜா,24; கண்டக்டர் முத்துராமன் இருவரும், பஸ்சை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றனர்.
பஸ் பயணிகள் இறங்கி, பஸ்சின் அடியில் பைக்குடன் சிக்கிய தம்பதியை மீட்டனர்.
ஆனால், இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
தகவலறிந்த டி.எஸ்.பி., லாமேக், அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் மற்றும போலீசார் விரைந்து சென்று, விபத்தில் இறந்த சப் இன்ஸ்பெக்டர் இளவரசி, அவரது கணவர் கலைவேந்தன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து, தப்பியோடிய பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.
பைக் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் புதுமண தம்பதி இறந்த சம்பவம், அக்கறை ஜெயங்கொண்டபட்டினம் கிராமத்தையும், மாவட்ட போலீசார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் உயிரிழந்த சப் இன்ஸ்பெக்டர் இளவரசி உடலுக்கு, கடலுார் எஸ்.பி., ஜெயக்குமார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.