சுத்தமான குடிநீர் வழங்க கோரிக்கை
நெட்டப்பாக்கம்: மணக்குப்பத்தில் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மங்கலம் தொகுதி, மணக்குப்பம் கிராமத்தில் நுாற்றுாக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டி, 40 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால், தொட்டியின் மேல் பகுதியில் சிமென்ட் காரை பெயர்ந்து, இரும்பு துருப்பிடித்து குடிநீரில் கலக்கிறது. இந்த குடிநீரே மக்களுக்கு வினியோகம் செய்யப்படுவதால் பொது மக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
நாளுக்கு நாள் மேல்நிலைத் தொட்டி வலுவிழந்து வருவதால், எந்த நேரமும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. குழாய் உடைந்து குடிநீருடன் கழிவு நீர் கலக்கிறது. எனவே, சேதமடைந்த மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியினை புனரமைத்து சுத்தமான குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.