காசநோய் விழிப்புணர்வு கூட்டம்

புதுச்சேரி: புதுச்சேரியில் காசநோய் பிரசார விழிப்புணர்வு கூட் டத்தில் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, இந்தாண்டில் 'காசநோய் இல்லாத இந்தியா' என்ற இலக்கை அடைய செயல்பட்டு வருகிறது. இதையொட்டி கரிக்கலாம்பாக்கம் மற்றும் வில்லியனுாரில், '100 நாட்கள் காசநோய் பிரசாரம்' குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் திறம்பட பங்களித்தல் மற்றும் ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாக கொண்ட இந்த கூட்டத்தில் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த, 138 பேர் கலந்து கொண்டனர்.

வில்லியனுார் வட்டார வளர்ச்சி அதிகாரி அன்கித் குமார், மாநில காசநோய் அதிகாரி வெங்கடேஷ், அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேசன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதில் பங்கேற்றவர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட தொப்பிகள் வழங்கப்பட்டன.

விழிப்புணர்வை ஏற்படுத்துதல், தொற்று எளிதில் ஏற்படக்கூடியவர்களை பரிசோதனை செய்தல் மற்றும் காசநோயாளிகள் முழுமையான சிகிச்சை எடுப்பதற்கு ஊக்கப்படுத்துதல் உள்ளிட்ட, 100 நாட்கள் பிரசாரத்தின் முக்கிய குறிக்கோள்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

Advertisement