வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுப்பதற்கு.. என்ன திட்டம் வச்சிருக்கீங்க...

பரமக்குடி: பரமக்குடி வைகை ஆற்றில் நகராட்சி ஒட்டு மொத்த கழிவு நீரும் விடப்படும் நிலையில் இதனை தடுக்க என்ன திட்டம் உள்ளது என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பரமக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. ஒரு லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மேலும் லாட்ஜ்கள், வணிக நிறுவனங்கள், மகால்கள், மருத்துவமனைகள் என ஏராளமாக உள்ளன. கடைசியாக நடந்த கணக்கெடுப்பின் படி 25 ஆயிரம் வீடுகள் இருந்த நிலையில் தற்போது 50 ஆயிரம் வீடுகளை கடந்துள்ளது.

வீடுகளில் மக்கள் பயன்படுத்தும் கழிவு நீர் வாறுகால் வழியாக வெளியேற்றப்பட்டாலும் சுத்திகரிக்க பாதாள சாக்கடை திட்டம் இல்லை. ஆரம்ப நிலையில் சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளி அருகில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இதில் ஒரு பகுதி கழிவு நீரை மட்டுமே சுத்திகரிக்க முடியும்.

இதனால் நகரில் 50 இடங்களில் கழிவு நீர் வைகை ஆற்றில் கலக்கிறது. இதனால் நன்னீரில் வளரும் செடிகள், மரம் மற்றும் பறவை, விலங்கினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. பரமக்குடி நகரம் வைகை ஆற்றின் நிலத்தடி நீராதாரத்தை மட்டுமே நம்பி இருக்கிறது. இங்குள்ள அனைத்து ஆன்மிக நிகழ்வுகளும் வைகை ஆற்றில் நடக்கிறது.

சித்ரா பவுர்ணமியில் அழகர் ஆற்றில் இறங்குதல், வைகாசி, பங்குனி பவுர்ணமி உட்பட அனைத்து கோயில் விழாக்களும் வைகை ஆற்றில் கொண்டாடப்படுகிறது.

எனவே நீராதாரத்தை பாதுகாக்கும் வகையில் அனைத்து வகை உயிரினங்களும் வாழ வைகை ஆற்றை துாய்மையாக வைத்திருக்க அரசுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான திட்டங்களை தீட்ட வேண்டும். பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-

Advertisement