இடியும் நிலையில் குடிநீர் தொட்டி, ரோடு இல்லை

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே மலைப்பட்டி ஊராட்சியில் இடியும் நிலையில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி, வாறுகால், ரோடுகள், இல்லாததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளகி வருகின்றனர்.

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது மலைப்பட்டி ஊராட்சி இதில் கூத்திப்பாறை, மலைப்பட்டி கிராமங்களை உள்ளடக்கி உள்ளது. மலைப்பட்டியில் தெப்பத்திற்கு அருகே குடிநீர் மேல்நிலை தொட்டி கட்டி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் தொட்டியின் அடிப்பகுதி சிமென்ட் பூச்சு பெயர்ந்து இடியும் நிலையில் உள்ளது.

ஊராட்சியில் நூலகம் கட்டி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், கட்டடத்தின் உட்புறம் வெளிப்புறம் சேதம் அடைந்துள்ளது. சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுவதால் நூலகத்திற்கு உள்ளே சென்று படிக்க மக்கள் பயப்படுகின்றனர். மலைப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு வாட்ச்மேன் இல்லை. வாட்ச்மேன் நியமிக்க மருத்துவ துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊராட்சிக்கு உட்பட்ட கூத்திபாறையில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. குடிநீர் மேல்நிலைத் தொட்டி இங்கு கட்ட வேண்டும். இங்கு ஊராட்சி மயானம் உள்ளதால் இறந்தவர்களை திறந்தவெளியில் கண்மாய் கரை அருகில் எரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தெருக்களில் வாறுகால், ரோடுகள் அமைக்கப்பட வேண்டும்.

ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் குழாய்கள் அமைக்கப்பட்டு தண்ணீர் வரவில்லை. இங்குள்ள சுகாதார நிலையத்திற்கு டாக்டர் பற்றாக்குறையால் தினமும் டாக்டர் வருவது இல்லை. நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.

மலைப்பட்டியில் காட்டுப்பன்றிகள் மான் தொல்லைகளினால் விவசாய பயிர்கள் சேதமடைகின்றன. பகல் நேரத்தில் பன்றிகள் உலா வருவதால் விவசாயிகள் தங்கள் நிலத்திற்கு செல்ல பயப்படுகின்றனர்.

Advertisement