குடிநீர் வசதி கேட்டு கல்மண்டபத்தில் மறியல்

நெட்டப்பாக்கம்:கல்மண்டபம் பாண்டி நகரில் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீர் கேட்டு மறியலில் ஈடுபட்டதால் மடுகரை - தவளக்குப்பம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட கல்மண்டபம் பாண்டி நகரில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்.

இப்பகுதிக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மடுகரை - தவளக்குப்பம் சாலையில் நேற்று காலை 8.00 மணியளவில் மறியலில் ஈடுப்பட்டனர்.

தகவலறிந்த நெட்டப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பொதுமக்களை சமாதானம் செய்தனர்.இருப்பினும் பொதுமக்கள்குடிநீர் வசதி இல்லாமல், குழந்தைகளை வைத்துக்கொண்டு அவதி படுவதாகவும், உடனடியாக நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் உத்திரவாதம் அளிக்க வலியுறுத்தி தொடர்ந்து மறியலில் ஈடுப்பட்டனர்.

அதையடுத்து இளநிலை பொறியாளர் அய்யப்பன் சம்பவஇடத்திற்கு வந்து மறியலில் ஈடுப்பட்ட பொதுமக்களிடம் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உத்திவாதம் அளித்தனர். அதையேற்று அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், மடுகரை - தவளக்குப்பம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

Advertisement